போலியை தடுக்க சான்றிதழை ஆன்லைனில் வெளியிட அரசு முடிவு

போலி சாதிச் சான்றிதழ் மோசடியை தடுக்கும் வகையில் டெல்லியில் இதுவரை வழங்கப்பட்டுள்ள சாதிச் சான்றிதழ்கள் பற்றிய அனைத்து தகவல்களையும் அடுத்த வாரம் ஆன்லைனில் வெளியிட ஆம் ஆத்மி அரசு முடிவு செய்துள்ளது.
பள்ளிக்கூட சேர்க்கையில் இருந்து அரசின் நலத்திட்ட உதவிகளை பெறுவது வரையில் நமது நாட்டில் மட்டும் சாதிச் சான்றிதழ்கள் கட்டாய தேவையாக மாறியுள்ளது.

இந்த அவசியத்தை சில இடைத்தரகர்கள் தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டு ஒவ்வொரு தாசில்தார் அலுவலக வாசலிலும் கடை விரித்து கல்லாகட்டி வருகின்றனர்.

முறைப்படி விண்ணப்பித்து, உரிய விசாரணைக்குப் பிறகு தாசில்தார் கையொப்பத் துடன் வழங்கப்படும் சாதிச் சான்றிதழ்களை பெறுவதில் ஏற்பட்டு வரும் தாமதத்தை தவிர்க்கும் வகையில் பள்ளி முழுத்தேர்வு விடுமுறைக்கு பின்னர்

பள்ளிகள் திறக்கப்படும் மே, ஜூன் மாதங்களில் உடனடியாக சான்றிதழ்களை பெறும் அவசரத்தில் பலாப்பழத்தை மொய்க்கும் ஈக்களாக, இந்த இடைத்தரகர்களை பொதுமக்கள் மொய்க்கத் தொடங்கி விடுகின்றனர்.

இந்த அவசியத்தையும், அவசரத்தையும் சாதகமாக்கிக் கொள்ளும் இடைத்தரகர்கள், போலி சாதிச் சான்றிதழ்களை அச்சடித்து, தாசில்தார் அலுவலக போலி முத்திரையுடனும்,

தாசில்தாரைப் போலவே திருட்டு கையொப்பமிட்டும், போலிச் சான்றிதழ்களை தயாரித்து வைத்துக் கொள்கின்றனர்.

நூற்றுக்கணக்கான ரூபாயை கையூட்டாக அளித்து, தங்கள் மூலமாக மனு செய்யும் மக்களுக்கு இந்த போலிச் சான்றிதழ்களை வினியோகித்து, அவர்கள் பிழைப்பு நடத்தி வருகின்றனர்.

இப்படி போலிச் சான்றிதழ் மூலம் ஆரம்பப் பள்ளிகளில் சேரும் பிள்ளைகள், கல்லூரி, ராணுவம், அரசுப் பணி அல்லது தனியார் பணியில் சேரும்போது நடத்தப்படும் ஆவண சரிபார்ப்பின் போது

இந்த மோசடிகள் எல்லாம் தெரியவந்து, இந்த சான்றிதழ்களுக்கு உரியவர்கள் சிக்கிக் கொள்வதால், கடும் நடவடிக்கையையும், சில வேளைகளில் தண்டனையையும் எதிர்கொள்ள நேர்கிறது.

எனவே, இந்த மோசடியை தடுக்கும் வகையில் டெல்லியில் இதுவரை வழங்கப்பட்டுள்ள சாதிச் சான்றிதழ்கள் பற்றிய அனைத்து தகவல்களையும் அடுத்த வாரம் ஆன்லைனில் வெளியிட அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசு முடிவு செய்துள்ளது.

இதன் மூலம், சான்றிதழ்களின் எண் வரிசையின்படி, யார் பெயருக்கு அந்தச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது?, அவர் எந்த சாதியைச் சேர்ந்தவர்? என்பவை உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் இணையதளம் மூலமாக யார் வேண்டுமானாலும் வெளிப்படையாக அறிந்து கொள்ள முடியும்.

மேலும், சாதி ஒதுக்கீட்டின் அடிப்படையில் பள்ளி, கல்லூரி, அரசு வேலை வாய்ப்பு போன்றவற்றில் மற்றவருக்கு கிடைக்க வேண்டிய முன்னுரிமையை கள்ளத்தனமாக யாரும் தட்டிப் பறிக்க முடியாது, என்பதும் குறிப்பிடத்தக்கது.
Tags:
Privacy and cookie settings