குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம் மறைவுக்கு, மத்திய அமைச்சர் பொன். இராதாகிருஷ்ணன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவரை இழந்து துயருறும் அவரது குடும்பத்தினர், விஞ்ஞான அறிஞர்கள், கல்வியாளர்கள் மற்றும் அனைத்து மக்களின் துயரிலும் நான் பங்கேற்கிறேன். அவரது ஆன்ம சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன் என்று தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட இரங்கல் செய்தி:
முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் அவர்கள் திடீர் மறைவு எய்திய செய்தி அறிந்து பெரிதும் அதிர்ச்சி அடைந்தேன். தமிழ் மண்ணில் ஓர் எளிய குடும்பத்தில் பிறந்து, ஏழ்மையில் வளர்ந்து, சோதனைகள் பல கடந்து மிகச்சிறந்த கல்விமானாக முன்னேறி வந்தவர்.
கல்லூரி பேராசியராக தன வாழ்வை தொடங்கி, இந்திய நாட்டின் விஞ்ஞான வளர்ச்சிக்கு பெரும்பங்காற்றி சாதனைகள் பல புரிந்தவர். இந்திய விண்வெளி ஆராய்ச்சி தலைமை விஞ்ஞானியாய்பொறுப்பேற்று, அத்துறையில் மகத்தான வரலாற்றை படைத்து இந்திய நாட்டின் புகழை உலக அரங்கின் உச்சிக்கே கொண்டு சென்றவர்.
எஸ்.எல்.வி. 3 ராக்கெட்டை பயன்படுத்தி ரோகினி 1 என்ற ஏவுகணை துணைக்கோளை வெற்றிகரமாக செலுத்தியதும்,
1998ஆம் ஆண்டு மே மாதம் 11 மற்றும் 13 ஆம் தேதிகளில் வெற்றி கண்ட போக்ஹ்ரான் அணு ஆயுத சோதனையில் முக்கியபொறுப்பேற்று பணியாற்றி இந்தியாவை அணு ஆயுத வல்லரசாக உலகில் தலை நிமிர வைத்த அவரது சாதனை அனைத்தும் எதிர்கால வரலாறு போற்றும்.
அரசியலில் இணையாமல் விஞ்ஞான உலகையே சுற்றி வந்த அவர், அனைத்து அரசியல் கட்சிகளின் ஒருமித்த ஆதரவோடு இந்திய குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பதே அவரது அறிவு, நேர்மை, உழைப்பு மற்றும் நாட்டுப்பற்று ஆகியவற்றிற்கு சிறந்த எடுத்துகாட்டாகும்.
தனது இறுதி நாள் வரை மிக எளிமையாக வாழ்ந்த அவர், கனவு காணுங்கள் என்ற அற்புதகருத்தோவியத்தை படைத்து இளைஞர்களின் எதிர்கால வாழ்விற்கு ஒளி விளக்காய் திகழ்ந்தவர்.அவரது இழப்பு இந்திய நாட்டிற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.
அவரை இழந்து துயருறும் அவரது குடும்பத்தினர், விஞ்ஞான அறிஞர்கள், கல்வியாளர்கள் மற்றும் அனைத்து மக்களின் துயரிலும் நான் பங்கேற்கிறேன். அவரது ஆன்ம சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன் என்று தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.