சிலிண்டரை தொலைபேசி மூலம் புக் செய்வதில் அதிக கட்டணம் செலவாகிறது

சமையல் எரிவாயு சிலிண்டரை தொலைபேசி மூலம் புக்கிங் செய்யும் போது தொலைபேசி கட்டணம் அதிகமாக செலவாகிறது என்று உங்கள் குரலில் வாசகர் ஒருவர் புகார் கூறியுள்ளார்.
 
இது தொடர்பாக கேளம்பாக்கத் தைச் சேர்ந்த செந்தில் என்ற வாசகர், ‘தி இந்து உங்கள் குரல்’ தொலைபேசி எண்ணை தொடர்புகொண்டு கூறியதாவது:
வீட்டில் சமையல் எரிவாயு தீர்ந்துவிட்டால் புதிய சிலிண்டரை பதிவு செய்வதற்காக தனி தொலைபேசி எண் வழங்கப்பட்டுள்ளது. 

தற்போது புதிய சிலிண்டரை புக் செய்ய இந்த தொலைபேசி எண்ணைத் தொடர்புகொண்டால், காஸ் மானியத்தை விட்டுக் கொடுங்கள் என்ற செய்தி சில நிமிடங்கள் வரை அறிவிக்கப்படுகிறது. இதனால் உடனடியாக சிலிண்டரை பதிவு செய்ய முடியவில்லை. 

இதனால் தொலைபேசி கட்டணம் அதிகமாக செலவாகிறது. பொதுமக்களின் கஷ்டத்தை புரிந்து கொண்டு மானியத்தை விட்டுக் கொடுங்கள் என்ற அறிவிப்பை சிலிண்டரை பதிவு செய்த பின்னர் ஒலிபரப்பும் வகையில் எண்ணெய் நிறுவனங்கள் மாற்ற வேண்டும். அல்லது அதன் நேரத்தை குறைக்க வேண்டும். 

இவ்வாறு அவர் கூறினார். 

இது குறித்து ஐஓசி அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, “நுகர்வோர் தெரிவிக்கும் கருத்துகள் அவர் தரப்பில் இருந்து பார்க்கும்போது சரிதான். ஆனால் அதேசமயம் தேசத்தின் நலனுக்காக ஒரு சில நிமிடங்களை ஒதுக்குவதில் தவறில்லை.
தற்போது ஒலிபரப்பப்படும் அறிவிப்பு குறிப்பிட்ட காலகட்டம் வரை மட்டும் பயன்படுத்தப்படும். மேலும் இது குறித்த முடிவை பெட்ரோலியத் துறை அமைச்சகம்தான் எடுக்க முடியும்” என்றார்.
Tags:
Privacy and cookie settings