வாடிக்கையாளர்களுக்கு இலவச ஆட்டோ பயணம் !

1 minute read
குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம் மறைவுக்கு நாடு முழுவதும் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னையில் வாடகை ஆட்டோ ஓட்டிவரும்
பயணிகளுக்கு நேற்று ஒருநாள் இலவசமாக ஆட்டோ ஓட்டி, அப்துல்கலாமுக்கு அஞ்சலி செலுத்திய ஆட்டோ ஓட்டுநர் கிறிஸ்டோபர் ரவிச்சந்திரன். படம்: ம.மோகன்
கிறிஸ்டோபர் ரவிச்சந்திரன் என்பவர் நேற்று வித்தியாசமான முறையில் அப்துல் கலாமுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.
அப்துல் கலாம் மீது தான் கொண்ட பற்றை வெளிப்படுத்தும் விதமாக நேற்று பயணிகளுக்கு அவர் இலவசமாக ஆட்டோ ஓட்டியுள்ளார். 

கிறிஸ்டோ பர் ரவிச்சந்திரனின் இந்த வித்தியா சமான அஞ்சலி பயணிகளை நெகிழ்ச்சியடைய வைத்தது. இதுகுறித்து அவர் ‘தி இந்து’ விடம் கூறும்போது, “எனது சொந்த ஊர் மன்னார்குடி. என் குடும்பத்தினர் எல்லோரும் ஊரில் இருக்கிறார்கள்.

நான் கடந்த 28 ஆண்டுகளாக சென்னையில் வாடகை ஆட்டோ ஓட்டி வருகிறேன். எத்தனையோ தலைவர்கள், மாமேதைகள் நம்மைவிட்டு பிரிந்து போகிறார்கள். அவர்களில் சிலர் நம்மைவிட்டு நீங்கும்போது சொல்ல முடியாத வேதனை ஏற்படுகிறது. 

அப்படிப்பட்டவர்களில் ஒருவராகத் தான் டாக்டர் அப்துல் கலாம் தெரிகிறார். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருக்கும் பிடித்த அவரது மறைவு என்னை மிகவும் பாதித்தது. 

அதனால் அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இன்று (நேற்று) ஒருநாள் மட்டும் ஆட்டோவை இலவசமாக ஓட்ட முடிவெடுத்தேன். இதற்காக நான் சேமித்து வைத்திருந்த ஆயிரம் ரூபாயை பெட்ரோல் வாங்க பயன் படுத்தினேன்’’ என்றார்.
Tags:
Today | 10, April 2025
Privacy and cookie settings