பெரம்பலூர் அருகே 100 நாள் வேலை திட்டத்தில் பணி செய்யாமல் தூங்கிய 250 பயனாளிகளின் அடையாள அட்டையை அதிகாரி அதிரடியாக பறிமுதல் செய்தார்.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் மூலம் ஏரி ஆழப்படுத்தும் பணி, வரத்து வாய்கால் சீரமைக்கும் பணி மற்றும் சாலை செப்பனிடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இத்திட்டத்தில் சேர்ந்துள்ள பயனாளிகள் பெரும்பலானோர் வேலைக்கு வந்துவிட்டு வேலை செய்யாமல் இருப்பதாக வேப்பந்தட்டை வட்டார வளர்ச்சி அதிகாரி இளங்கோவனுக்கு தகவல் வந்துள்ளது.
அவர் நேற்று இப்பணியை திடீர் ஆய்வு செய்தார். அப்போது அனுக்கூர் ஊராட்சியில் ஏரி ஆழப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த பயனாளிகள் பெரும்பாலானோர் வேலை செய்யாமல் மரத்தடி நிழலில் தூங்கி கொண்டிருந்தனர்.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த இளங்கோவன், பணியில் சேர்ந்து வேலை செய்யாமல் இருந்த 250 பயனாளிகளின் வருகை பதிவேடு அட்டைகளை பறிமுதல் செய்தார்.
வட்டார வளர்ச்சி அதிகாரி இளங்கோவன் கூறுகையில், 100 நாள் வேலை திட்டத்தில் சேரும் பயனாளிகள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட அளவு பணியை முடித்தால் மட்டுமே திட்டத்தில் முழு ஊதியம் வழங்கப்படும். பணி நேரத்தில் வேலை செய்யாமல் இருந்தால் அவர்களது அட்டை பறிமுதல் செய்யப்படும்.
மேலும் வேலை செய்து முடித்த அளவிற்கு மட்டுமே அளந்து சம்பளம் வழங்கப்படும். ஏற்கனவே பில்லாங்குளம் ஊராட்சியில் பணியில் சேர்ந்து வேலை செய்யாமல் இருந்த 60 பயனாளிகளின் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றார்.