குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம் மறைவால் நாம் ஒரு தாயை இழந்துள்ளோம் என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, குடியரசுத் தலைவர் மாளிகையின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பிரணாப் முகர்ஜி தனது இரங்கல் செய்தியை தெரிவித்துள்ளார்.
இரங்கல் செய்தியில், இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சியின் சாதனைத் தலைவராக நாட்டின் பாதுகாப்பை விரிவுபடுத்தியவர் அப்துல் கலாம் என்று பிரணாப் தெரிவித்துள்ளார்.
ஒரு அதி சிறந்த விஞ்ஞானியாக, ஆளுமைத் திறன் மிக்கவராக, கல்வியாளராக, ஒரு எழுத்தாளராக அப்துல் கலாம் நமது நினைவில் எப்போதும் நீங்காமல் இருப்பார் என்றும் பிரணாப் கூறியுள்ளார்.
குழந்தைகள் மீது மிகுந்த அன்பு வைத்திருந்த கலாம், இளைஞர்களால் விரும்பப்பட்டவர் என்றும், தனது ஊக்கம் மிகுந்த பேச்சால், கருத்தால் இளைஞர்களை கவர்ந்தவர் என்றும் பிரணாப் புகழாரம் சூட்டியுள்ளார்.
தனது எளிமையால் அனைவரது மனதிலும் இடம் பிடித்தவர் அப்துல் கலாம் என்றும், தாய் நாட்டின் வளர்ச்சிக்காக தம்மை முழுவதுமாக அர்ப்பணித்துக் கொண்ட மிகப் பெரிய மனிதரை, தாயை நாம் இழந்து விட்டோம் என்று உருக்கமாக பிரணாப் தெரிவித்துள்ளார்.
அப்துல் கலாம் மறைவு தனிப்பட்ட முறையில் தனக்கு மிகப் பெரிய இழப்பு என்றும் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தனது இரங்கல் செய்தியில் கூறியுள்ளார்.