'டிவி' நிகழ்ச்சியை பின்பற்றி உயிர் பிழைத்த இளம்பெண்

வாஷிங்டன்:விமான விபத்தில் சிக்கிய இளம்பெண், 'டிவி' நிகழ்ச்சிகளில் காட்டப்பட்ட வழிமுறைகளை பயன்படுத்தி, உயிர் பிழைத்த சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த ஆடம், 16, என்னும் இளம்பெண், விமான விபத்தில் சிக்கினாள். மீட்பு படையினர் வரும் வரை காத்திருக்காமல், ஏறக்குறைய, 150 கி.மீ., துாரம் நடந்து வந்து உதவி பெற்றாள்.

இதுகுறித்து, ஆடமின் தந்தை டேவிட் கூறியதாவது: கடந்த சனிக்கிழமை, என் மகள் ஆடம், தன் தாத்தா - பாட்டியுடன் தனி விமானத்தில், மோண்டாவில் இருந்து வாஷிங்டனுக்கு சென்றாள்.

அவர்களுடைய விமானம், குறித்த நேரத்தில் வாஷிங்டனுக்கு வராததால், சந்தேகமடைந்து, மீட்பு படையிடம் புகார் அளித்தேன். இதையடுத்து, இரண்டு நாட்கள் தேடியதில், விபத்துக்குள்ளான விமானம் குறித்த தகவல் தெரியவில்லை என்று அவர்கள் கூறிவிட்டனர்.

இந்நிலையில், கடந்த திங்கள்கிழமை, வாஷிங்டனில் இருந்து, 150 கி.மீ., தொலைவில் என் மகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வந்தது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். விபத்து குறித்து, ஆடம் கூறியதாவது: 

நாங்கள் சென்ற விமானம், அடர்ந்த மேகக்கூட்டத்தை கடந்தபோது மலையில்  மோதி விபத்துக்குள்ளானது. விமானத்தில் இருந்து, நான் வெளியில் குதித்துவிட்டேன்.

என் கண் எதிரில், விமானம் தீப்பிடித்து எரிந்ததில், தாத்தா, பாட்டி இருவரும் உடல் கருகி இறந்தனர். விபத்து நடந்தது மலைப்பிரதேசம் என்பதால், மீட்பு படையினர் வரும் வரையில் காத்திருப்பதில் பயனில்லை என்பதால் நடக்கத் துவங்கினேன்.

இரவு நேரங்களில், மரங்களின் மீது ஓய்வெடுப்பேன். இவ்வாறு, மூன்று நாட்களில், 150 கி.மீ., துாரம் நடந்து, நெடுஞ்சாலையை அடைந்தேன். அங்கு வந்த காரை நிறுத்தி, நடந்த சம்பவத்தை கூறி, உதவி கேட்டேன்.
அவர் அருகில் உள்ள ஊருக்கு அழைத்து சென்று, அங்கிருந்தோரிடம் நடந்ததை கூறி உதவி கேட்டார். அங்குள்ள மக்கள், மீட்பு படையினருக்கு தகவல் அளித்ததுடன், என்னையும் மருத்துவ மனையில் சேர்த்தனர்.

சிறு வயது முதல், சர்வைவல் மற்றும் அட்வெஞ்சர், 'டிவி' நிகழ்ச்சிகளை தந்தையுடன் சேர்ந்து பார்ப்பேன். அதில் வருவது போன்ற தற்காப்பு வழிகளை பின்பற்றியதால் நான் உயிர் பிழைத்தேன்.இவ்வாறு ஆடம் கூறியுள்ளார்.
Tags:
Privacy and cookie settings