"இஸ்லாமிய மக்களின் உயர்வுக்காகப் பாடுபட்ட, இன்றும் பாடுபடுகின்ற உரிமை உணர்வுகளுடன், தமிழகத்தில் வாழும் இஸ்லாமிய மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த ரமலான் திருநாள் நல்வாழ்த்துகளை உரித்தாக்கி மகிழ்கிறேன்" என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "உலகெங்கும் வாழும் இஸ்லாமிய சமுதாய மக்கள் ஒரு மாத காலம் உடலையும், உள்ளத்தையும் வருத்திக் கொண்டு,
கடுமையான நோன்பிருந்து, பசிக் கொடுமையை அனுபவப்பூர்வமாக உணர்ந்து அன்பு, இரக்கம், கருணை, ஈகை எனும் பண்புகள் சிறக்க ரமலான் திருநாளை மிகுந்த மகிழ்ச்சியோடும், மன எழுச்சியோடும் கொண்டாடுகிறார்கள்.
எனது அருமைத் தலைவர் பேரறிஞர் அண்ணாவை நான் முதன்முதல் சந்தித்தது திருவாரூரில் நடைபெற்ற நபிகள் நாயகம் விழாவில்தான்.
புதுச்சேரியில் காலிகள் சிலரால் தாக்கப்பட்டு, மூதாட்டி ஒருவரால் காப்பாற்றப்பட்டு, தந்தை பெரியார் அவர்கள் தங்கியிருந்த இடத்திற்குப் பாதுகாப்பாக நான் செல்வதற்கு உதவியாக அமைந்ததே இஸ்லாமிய உடைகள் தான்.
இப்படி என் இளம் பருவ வாழ்வோடு இயல்பாக இணைந்தது இஸ்லாமிய சமுதாயத் தொடர்பு. அதன் மாபெரும் தலைவராகத் திகழ்ந்த கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்களிடம் நெருங்கிப் பழகி,
அவரது அன்பிற்குரியவனாகவும் விளங்கியுள்ளேன். தொடர்ந்து இந்த இஸ்லாமிய சமுதாயத்தோடு எனக்கு ஏற்பட்ட நட்புகள் காரணமாக நான் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற காலங்களில் இஸ்லாமிய சமுதாய மக்களின் அரசியல்,
சமூக, பொருளாதார நிலைகள் உயர வழிவகுத்திடும் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி, ஏராளமான சலுகைகளை வழங்கிய நிகழ்வுகளையெல்லாம் இத்திருநாளின்போது நினைவு கூர்கிறேன்.
அதாவது; 1969இல் மீலாதுநபிக்கு முதன்முதல் அரசு விடுமுறை அளித்தது; 2001இல் அமைந்த அ.தி.மு.க. அரசு ரத்து செய்த மீலாதுநபி அரசு விடுமுறையை 15.11.2006 ஆணை மூலம் மீண்டும் விடுமுறை நாளாக அறிவித்தது;
1973இல் உருது பேசும் முஸ்லிம்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தது; 1974இல் சென்னை அண்ணா சாலை அரசினர் மகளிர் கல்லூரிக்கு காயிதே மில்லத் அரசு மகளிர் கல்லூரி எனப் பெயர் சூட்டியது;
1989இல் இஸ்லாமியர் உள்ளிட்ட சிறுபான்மையினர் சமுதாய மக்கள் பெரும் பயன் எய்தும் வகையில் “சிறுபான்மையினர் நல ஆணையம்” 13.2.1989 அன்று தொடங்கியது; 1998இல் ஓய்வூதியம் பெறும் உலமாக்களின் எண்ணிக்கை 2000 என்பதை 1998இல் 2,200 ஆகவும்;
2008இல் 2,400 ஆகவும் உயர்த்தியது; மதுரை வக்பு வாரிய கல்லூரிக் கட்டடங்களைப் பராமரித்திட முதன்முதலாக 5 இலட்சத்து 95 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கியது; 1999இல் வக்பு வாரியச் சொத்துகளைப் பராமரிப்பதற்கென முதன் முறையாக 40 லட்சம் ரூபாய் மானியம் வழங்கியது;
ஹஜ் புனிதப் பயணத்திற்குக் குலுக்கல் முறையில் ஆண்டிற்கு 1800 பேருக்கு மிகாமல் தேர்ந்தெடுத்து அனுப்பப்பட்ட முறையைக் கைவிட்டு, 1999 முதல் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ள அனுமதி வழங்கியது;
பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தில் இருந்து தனியே பிரித்து இஸ்லாமியர் உள்ளிட்ட சிறுபான்மையினர் பயன் பெறும் வகையில், ‘தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தை 1.7.1999 அன்று அமைத்தது;
2003இல் அ.தி.மு.க. அரசு, பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்துடன் மீண்டும் இணைத்த சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தை 12.11.2006 இல் மறுபடியும் தனியே செயல்படச் செய்து சிறுபான்மைச் சமுதாய மக்களுக்கு மீண்டும் உதவியது;
2000இல் ‘உலமா ஓய்வூதியத் திட்டத்தை’ 19.7.2000 முதல் தர்காக்களில் பணிபுரியும் முஜாவர்களுக்கும் நீட்டித்தது; இஸ்லாமியரின் நீண்ட நாள் கோரிக்கை ஏற்கப்பட்டு 21.7.2000 அன்று “உருது அகாடமி” தொடங்கியது;
2001இல் “காயிதே மில்லத் மணிமண்டபம்” 58 இலட்சத்து 69 ஆயிரம் ரூபாய் செலவில் சென்னையில் அமைத்திட நிதி ஒதுக்கீடு செய்து 25.2.2001 அன்று அடிக்கல் நாட்டி, பின்னர் கட்டிமுடிக்கப்பட ஆவன செய்தது;
2007இல் இஸ்லாமியர்களுக்குப் பிற்படுத்தப்பட்டோருக்கான 30 விழுக்காட்டில் 3.5 விழுக்காடு உள்ஒதுக்கீடு வழங்கி இன்று இஸ்லாமியர்கள் அரசுக் கல்வி நிறுவனங்களில் உரிய இடங்களைப் பெறவும், தமிழக அரசுப் பணிகளில் தங்களுக்குரிய பங்கினைப் பெற்று வளம் பெறவும் வழி வகுத்தது;
சிறுபான்மையினரின் சமூக, பொருளாதார, கல்வி முன்னேற்றத்திற்குத் தனிக்கவனம் தேவை என்பதைக் கருத்தில் கொண்டு அவர்களின் நலனுக்கென “தனி இயக்குநரகம்” 6.4.2007 அன்று அமைத்தது;
2008இல் சீறாப்புராணம் பாடிய உமறுப் புலவருக்கு எட்டயபுரத்தில், “அமுதகவி உமறுப்புலவர் மணிமண்டபம்” திறந்தது; “உலமா மற்றும் பணியாளர்கள் நல வாரியம்” 24.8.2009 அன்று ஏற்படுத்தப்பட்டு அவர்களுக்குப் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கியது;
தமிழ்நாடு திருமண பதிவுச் சட்டம் 2009 குறித்து, இஸ்லாமிய அமைப்புகள் அளித்த கோரிக்கையை ஏற்று, இஸ்லாமியர்களின் திருமணங்களைப் பதிவு செய்யும் படிவத்தில் தக்க திருத்தங்கள் மேற்கொள்ளச் செய்தது என இப்படி இஸ்லாமிய மக்களின் உயர்வுக்காகப் பாடுபட்ட,
இன்றும் பாடுபடுகின்ற உரிமை உணர்வுகளுடன், தமிழகத்தில் வாழும் இஸ்லாமிய மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த ரமலான் திருநாள் நல்வாழ்த்துகளை உரித்தாக்கி மகிழ்கிறேன்" என்று கூறியுள்ளார்.