பெய்ஜிங்: சீனா ஷாப்பிங் மாலில் நகரும் படிக்கட்டில், தமது குழந்தையுடன் வந்த பெண் ஒருவர், எந்திரத்தில் ஏற்பட்ட துளையில் சிக்கி, உடல் நசுங்கி உயிரிழந்தார்.
இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் மத்திய பகுதியில் அமைந்துள்ள ஹூபேய் மாகாணத்தின்,
ஜிங்ஷுவ் நகரில் 30 வயது இளம் பெண் ஒருவர், தனது கைக்குழந்தையுடன் பொருட்கள் வாங்கிச் செல்ல அப்பகுதியில் உள்ள ஷாப்பிங் மாலிற்கு வந்துள்ளார்.
அப்போது, கீழ் தளத்திலிருந்து, மேல் தளத்திற்காக செல்வதற்காக, குழந்தையுடன் நகரும் மின் ஏணி மூலம் ஏறிச் சென்றுள்ளார்.
மேல்தளத்தை அடைந்தபோது, அதிலிருந்து இறங்க முயற்சி செய்த போது, நகரும் படிக்கட்டு எந்திரத்தின் முகப்பு பகுதி, திடீரென உடைந்து விழுந்தது.
உடனே அந்த பெண் தனது குழந்தையை மேலே தள்ளி விட்டார். இதைப் பார்த்தவர்கள் குழந்தையை உடனடியாக பிடித்தனர்.
ஆனால், அந்த இளம்பெண், அந்த நகரும் படிக்கட்டிற்குள் சிக்கி உள்ளே விழுந்தார். அவரை காப்பாற்ற முயன்ற முயற்சியும் பலனளிக்கவில்லை. இதில் அந்த பெண் உடல் நசுங்கி உயிரிழந்தார்.
இதனையடுத்து அந்த பெண்ணின் உடல் எஸ்கலேட்டர் எந்திரத்தின் உள் பகுதியில் இருந்து மீட்கப்பட்டது. இந்த சம்பவத்தின் காட்சிகள் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.