விதிகளை மீறினார் தேவயானி.. வெளியுறவுத்துறை !

அமெரிக்காவில் இந்திய தூதரக அதிகாரியாக பணிபுரிந்த தேவயானி கோப்ரகாடே, அரசின் விதிகளை வேண்டுமென்றே மீறி அவருடைய குழந்தைகளுக்கு இந்தியா மற்றும் அமெரிக்க பாஸ்போர்ட்களைப் பெற்றுள்ளார்.;
இதனால் அவருடைய நேர்மை குறித்து சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

2013ல் அமெரிக்காவில் இந்திய தூதரக அதிகாரியாக இருந்த தேவயானி, அவருடைய வேலை செய்த பணிப்பெண் சங்கீதாவுக்கு விசா மற்றும் சம்பளம் வழங்குவதில் கொடுமை செய்ததாக புகார் எழுந்தது.

இது தொடர்பான வழக்கில், டில்லி ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள வாக்குமூலத்தில் வெளியுறவுத்துறை அமைச்சகம் இந்த கடுமையான குற்றச்சாட்டை பதிவு செய்துள்ளது.

வெளிநாட்டு பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் இந்திய பாஸ்போர்ட் வைத்திருக்க இந்திய சட்டம் அனுமதிக்கவில்லை. தேவயானியின் குழந்தகளுக்கான இந்திய பாஸ்போர்ட்கள் செல்லாதென, கடந்த டிசம்பரில் வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்தது.

இந்த உத்தரவை எதிர்த்து, தேவயானி குழந்தைகள் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் டில்லி ஐகோர்ட் அனுப்பிய நோட்டீசுக்கு பதிலாக தாக்கல் செய்த மனுவில் வெளியுறவுத்துறை அமைச்சகம் இந்த குற்றச்சாட்டைப் பதிவு செய்துள்ளது.

அந்த மனுவில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது: குழந்தைகளுக்கு இரண்டு பாஸ்போர்ட்கள் வைத்திருப்பது தேவயானியின் நேர்மை குறித்து சந்தேகத்தை எழுப்பி உள்ளது. அவருடைய குழந்தைகளுக்கு அமெரிக்க பாஸ்போர்ட் இருக்கும் தகவலை வெளியுறவுத் துறையிடம் அவர் மறைத்திருக்கிறார்.

இந்திய அரசின் விதிகளையும் நடைமுறைகளையும் தெரிந்தே, வேண்டுமென்றே அவர் மீறியிருப்பதால் அவருடைய செயலுக்குரிய பின் விளைவை அவர் சந்தித்தே ஆக வேண்டும். அமெரிக்க பாஸ்போர்ட் பெற்ற அந்த நிமிடத்திலேயே அந்த குழந்தைகள், இந்திய பிரஜைகள் என்ற தகுதியை இழந்து விட்டனர்.

இத்தகைய செயல்களால் இந்திய அரசை தேவயானி ஏமாற்றி விட்டார். இந்திய வெளியுறவுத் துறை சேவைக்கான நடத்தை மற்றும் ஒழுங்கு விதிகளையும் மீறியுள்ளார்.

16 ஆண்டுகள் பாஸ்போர்ட் பிரிவில் பணியாற்றிய இந்த வெளியுறவுத்துறை அதிகாரி, வேண்டுமென்றே இந்த தக.வலை ( இரண்டு பாஸ்போர்ட்கள்) மறைத்துள்ளார். இவருடைய இந்த செயல் அமைச்சகத்துக்கு கடுமையான கவலையை ஏற்படுத்தி உள்ளது.

குழந்தைகளின் விசாவுக்கு பதிலாகவே அமெரிக்க பாஸ்போர்ட்களைப் பெற்றதாக தேவயானி வாதிட்டுள்ளார். அதை அமைச்சரகம் ஏற்கனவே நிராகரித்துள்ளது.

அமெரிக்க விசா பெறுவதில் சிரமம் இருந்திருந்தால் அதை அமைச்சகத்திடம் அவர் தெரிவித்திருக்க வேண்டும்; மாறாக நேர்மையற்ற வழியில் செயல்பட்டதால் அவர் மீது சந்தேகம் எழுந்துள்ளது. இவ்வாறு பதில் மனுவில் குறிப்படப்பட்டுள்ளது.
Tags:
Privacy and cookie settings