சென்னை மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டு ஒரே மாதத்தில், கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்தில் மேற்கூரை ஒழுகுவதாக பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
சென்னை கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்துக்கு நேற்று சென்ற பயணிகள் எஸ்கலேட்டர் சிறிது நேரம் செயல்படாததால் படிகளை பயன்படுத்த வேண்டியிருந்தது. மேற்கூரை வழியாக மழைத் தண்ணீர் ஒழுகுவதால் படிகளிலும் மழை நீர் தேங்கியிருந்ததால், கிரானைட் தரை வழுக்கும் விதத்தில் இருந்தது.
மெட்ரோ ரயில் நிலையங்களுக்குள் மழை நீர் அதிகம் வருவதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
ஆலந்தூர் முதல் கோயம்பேடு வரையிலான மெட்ரோ ரயில் சேவையை முதல்வர் ஜெயலலிதா கடந்த மாதம் 29-ம் தேதி தொடங்கிவைத்தார்.
இந்நிலையில், சமீபகாலமாக மெட்ரோ ரயில் நிலையங்களுக்குள் மழை நீர் தேங்குவதால் பயணிகள் பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலைய படிகளில் கூரையில் இருந்து வழியும் தண்ணீரைப் பிடிக்க மெட்ரோ நிர்வாகத்தினர் பெரிய அளவிளான பக்கெட்டுகளை வைத்திருந்தனர். இத்தனைக்கும் நுங்கம்பாக்கத்தில் 3 செ.மீ, மீனம்பாக்கத்தில் 2 செ.மீ. அளவிலேயே மழை பெய்திருந்தன.
நேற்று (புதன்கிழமை) டெல்லி மெட்ரோ ரயிலில் முதல் முறையாக பயணிக்க வந்த பயணி எஸ்.கோபாலகிருஷ்ணன் கூறும்போது, "மழை பெய்ததால் சாலை வழியாக செல்வதைவிட மெட்ரோ ரயிலில் ஆலந்தூர் செல்லலாம் என வந்தேன்.
இது என் முதல் மெட்ரோ பயணம் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்புடன் வந்தேன். ஆனால், எனக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இப்போதுதான் திறக்கப்பட்ட கட்டத்தில் மேற்கூரையில் மழை தண்ணீர் வழிவது எப்படி" என்றார்.
அதேபோல், தினகரன் என்ற மற்றொரு பயணி கூறும்போது, "மெட்ரோ ரயில் நிலையத்தில் ஆங்காங்கே மழை தண்ணீர் தேங்கியிருக்கிறது. கிரானைட் தரை என்பதால் வயதானவர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் செல்லவேண்டும்" என்றார்.
மேற்கூரை களுக்கும், நடைமேடை சுவர்களுக்கும் இடையே அதிக இடைவெளி இருப்பதாலேயே, மழைநீர் உள்ளே வருகிறது என்று கூறப்படுகிறது.
ஆலந்தூர், வடபழனி, சிஎம்பிடி, கோயம்பேடு நிலையங்களின் அருகில் பெரிய அளவில் கட்டிடங்கள் இல்லாததால், சாதாரணமாக காற்று வீசினாலே மழைநீர் எளிதில் உள்ளே வந்துவிடுகிறது" என்றனர்.
இதுபற்றி அங்குள்ள மெட்ரோ ரயில் பணியாளர்கள் கூறும்போது, "எல்லா மெட்ரோ ரயில் நிலையங்களிலும் அதிக அளவில் மழைநீர் உள்ளே வருவதில்லை. சாரல்தான் உள்ளே அடிக்கிறது.
ஆலந்தூர், வடபழனி, சிஎம்பிடி, கோயம்பேடு நிலையங்களின் அருகில் பெரிய அளவில் கட்டிடங்கள் இல்லாததால், சாதாரணமாக காற்று வீசினாலே மழைநீர் எளிதில் உள்ளே வந்துவிடுகிறது" என்றனர்.
இதுதொடர்பாக மெட்ரோ ரயில் அதிகாரிகளிடம் கேட்டபோது, "ரயில் நிலையங்களில் நல்ல காற்றாட்டம் இருக்க வேண்டும் என்பதற்காகவே மேற்கூரைக்கும் நடைமேடை சுவர்களுக்கும் இடையே தாராளமாக இடைவெளி விட்டு அமைக்கப்பட்டுள்ளது.
பயணிகளின் புகார் குறித்து பரிசீலிக்கப்படும். தேவையிருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர்.