மதசார்பின்மையை தொடர்ந்து பாதுகாப்போம்.. வைகோ பேச்சு !

ம.தி.மு.க. சார்பில் நடைபெற்ற ரம்ஜான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் ‘‘மதசார்பற்ற தன்மையை தொடர்ந்து பாதுகாப்போம்’’ என்று அக்கட்சியின் பொது செயலாளர் வைகோ பேசினார்.
நோன்பு திறக்கும் நிகழ்ச்சி

ம.தி.மு.க. சார்பில் ரம்ஜான் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி சென்னை எழும்பூரில் உள்ள சிராஜ் மஹாலில் நேற்று மாலை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, கட்சியின் சிறுபான்மை பிரிவு செயலாளர் முராத் புஹாரி தலைமை தாங்கினார்.

ரெட்சன் அம்பிகாபதி, திருச்சி டாக்டர் ரொஹையா, நெல்லை கே.எம்.ஏ.நிஜாம் உள்பட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

ம.தி.மு.க. எழும்பூர் பகுதி செயலாளர் தென்றல் நிசார் வரவேற்று பேசினார். இதையடுத்து, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

ஆபத்தான காலம்

நாட்டில் மதசார்பின்மைக்கு ஆபத்து வருகிறது. சிறுபான்மை மக்களுக்கு ஆபத்து வருகிறது. இதை எதிர்க்க வேண்டிய கடமை ஜனநாயகத்திலே நம்பிக்கையுள்ள ஒவ்வொருவருக்கும் பொறுப்பு உண்டு.

இது ஆபத்தான காலம். இதை எதிர்க்க ம.தி.மு.க. எப்போது போர்க்கொடி தூக்கும். நான் ரொம்ப நல்லவன். யோக்கிய மானவன் என்று பலர் கூறுவார்கள். ஆனால் ஓட்டு மட்டும் போட மாட்டார்கள்.

இயக்கத்தை பாதுகாத்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்திலே தான் நான் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்தேன். ஆனால் எந்த காலத்திலும் என்னுடைய கொள்கையில் அவர்களிடம் சமரசம் செய்ய வில்லை.

உதாரணமாக, அத்வானி ஒரு முறை அ.தி.மு.க. மாநாட்டுக்கு வந்தார். அப்போது அவரிடம் பா.ஜ.க. மதசார்பற்ற தன்மையை ஏற்றுகொள்கிறதா? இல்லையா? என்று பகிரங்கமாக அந்த மேடையில் கேட்டேன்.

அதேபோல் நரேந்திரமோடி பதவியேற்கும் போது, ஈழத்தமிழரை கொன்று குவித்த ராஜபக்சேவுக்கு அழைப்பு விடுத்தார்கள்.

நான் அவர்கள் கூட்டணியில் இருந்தாலும், அதை எதிர்த்து குரல் கொடுத்தேன். அதற்காக நரேந்திரமோடி பதவி பிராமணம் எடுத்தபோது, நாங்கள் கொட்டடியில் கிடந்தோம்.

பாதுகாப்போம்

மதசார்பற்ற தன்மையை ஏற்க முடியாது என்று பா.ஜ.க. மந்திரி ஒருவர் கூறுகிறார். இதைவிட வேறு பெரிய ஆபத்து ஒன்றும் இல்லை. இது திராவிட இயக்க பூமி. பெரியார், அண்ணா உலாவிய பூமி. ரத்தம் சிந்தி கொள்கைகளை காப்பாற்றிய பூமி.

நானும், என்னுடன் இருக் கும் லட்சக்கணக்கான தோழர் களும் உறுதியாக இருக்கிறோம். நாங்கள் தொடர்ந்து மதசார்பற்ற தன்மையை பாதுகாப்போம். தாய் தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்டுவோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில், த.மு.மு.க. மூத்த தலைவர் எம்.எச்.ஜவாருல்லா, எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி, ம.தி.மு.க.பொருளாளர் டாக்டர் இரா.மாசிலாமணி, துணை பொதுச்செயலாளர் மல்லை சி.சத்யா உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Tags:
Privacy and cookie settings