இலங்கை அரசை சர்வதேச கூண்டில் நிறுத்த கையெழுத்து இயக்கம்

1 minute read
இலங்கை அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த ஐ.நா. மன்றத்தை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கையெழுத்து இயக்கத்தை தொல்.திருமாவளவன் தொடங்கி வைத்தார்.
கையெழுத்து இயக்கம்

இலங்கையில் நடந்த விடுதலைப்புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்ட போரில் ஏராளமான தமிழர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்த நிலையில், இந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கைகள் எழுந்து உள்ளது.

இந்தநிலையில் நடைபெற உள்ள இலங்கை பிரதமர் தேர்தலில் போர்க்குற்றவாளியான முன்னாள் அதிபர் ராஜபக்சே போட்டியிடுவதை கண்டித்தும், இலங்கை அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த ஐ.நா. மன்றத்தை வலியுறுத்தியும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கையெழுத்து இயக்கம் நடத்தி 10 லட்சம் பேரிடம் கையெழுத்து பெற முடிவு செய்யப்பட்டு உள்ளது.

திருமாவளவன் தொடங்கி வைத்தார்

முதல் கட்டமாக கோயம்பேடு பஸ் நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நேற்று கையெழுத்து இயக் கம் நடந்தது. அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் இதில் கலந்து கொண்டு பஸ் பயணிகளிடம் கையெழுத்து வாங்கி கையெழுத்து இயக் கத்தை தொடங்கி வைத்தார்.

அப்போது தொல்.திருமாவளவன், நிருபர்களிடம் கூறும்போது, “போர்க்குற்றவாளி ராஜபக்சே, தனது குற்றத்தை மறைக்க பிரதமர் தேர்தலில் போட்டியிடுகிறார். அதற்கு இலங்கை அதிபர் உறுதுணையாக உள்ளார்.

இனப்படுகொலை செய்த போர்க்குற்றவாளி, பிரதமர் தேர்தலில் போட்டியிடுவது மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது. ஐ.நா. மன்றம் உரிய நடவடிக்கை எடுத்து ராஜபக்சேவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும்” என்றார்.

இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைமை நிலைய செயலாளர் பாலசிங்கம், செயலாளர்கள் இளம் சேகுவரா, எஸ்.எஸ்.பாலாஜி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:
Today | 23, March 2025
Privacy and cookie settings