கமுதியில் ரூ.4536 கோடியில் 5 சூரிய மின்சக்தி உற்பத்தி நிலையங்கள் அமைக்க, அதானி குழுமத்திற்கும், தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கும் இடையே தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் தலைமையிலான அரசு, தமிழகத்தில் புதுப்பிக்கத்தக்க மின் ஆற்றலை அதிக அளவில் உற்பத்தி செய்ய பல முனைப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதனடிப்படையில், தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு சூரிய மின்சக்தி கொள்கை 2012-யை 20.12.2012 அன்று அறிவித்துள்ளது.
தமிழ்நாடு சூரிய மின்சக்தி கொள்கை 2012-ன்படி, சூரிய மின்சக்தி வாங்குவதற்கு தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் 12.9.2014-ல் நிர்ணயித்துள்ளபடி யூனிட் ஒன்றுக்கு 7 ரூபாய் 1 பைசா என்ற விலையில் மின்சாரம் கொள்முதல் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
அந்த வகையில், 436 மெகாவாட் அளவிற்கு சூரிய மின்சாரம் வாங்குவதற்காக 31 சூரிய மின்சக்தி உற்பத்தியாளர்களுடன் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் ஏற்கெனவே மின்சக்தி கொள்முதல் ஒப்பந்தம் செய்துள்ளது.
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா முன்னிலையில், அதானி குழும நிறுவனங்களால் இராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டத்தில் 4,536 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள சூரிய மின்சக்தி உற்பத்தி நிலையங்களிலிருந்து 648 மெகாவாட் அளவிற்கு சூரிய மின்சாரம் வாங்குவதற்கு கையெழுத்தான ஒப்பந்தங்களுடன் சேர்த்து,
இதுவரை மொத்தம் 1084 மெகாவாட் சூரிய மின்சாரம் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தங்கள் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தால் கையெழுத்திடப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தங்களின் மூலம் தமிழ்நாட்டில் சூரிய மின்சக்தி உற்பத்தி நிறுவனங்களால் 7,588 கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும்.இராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் நிறுவப்படவுள்ள சூரிய மின்சக்தி உற்பத்தி நிலையங்களில் உற்பத்தியாகும் மின்சாரத்தை எடுத்து செல்வதற்கு,
இராமநாதபுரம் மாவட்டம் - கமுதியில் 435 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 400 கி.வோ. துணை மின் நிலையம் நிறுவும் பணிகள் மற்றும் விருதுநகர் மாவட்டம் - திருச்சுழி அருகே 47 கோடியே 51 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 230 கி.வோ புதிய முத்துராமலிங்கபுரம் துணை மின் நிலையம் நிறுவும் பணிகள் ஆகியவை தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும், இராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் 208 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், மின் பாதை அமைக்கும் பணிகள் மற்றும் துணை மின் நிலைய மேம்பாட்டு பணிகள் ஆகிய பணிகளும் தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இது வரை ஒப்பந்தங்கள் செய்துள்ள நிறுவனங்கள் தவிர மேலும், 107 சூரிய மின்சக்தி உற்பத்தியாளர்கள் 2722.5 மெகாவாட் நிறுவுதிறன் கொண்ட சூரிய மின்சக்தி உற்பத்தி நிலையங்களை நிறுவிட தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திடம் பதிவு செய்துள்ளனர்.
இதில் மொத்தம் 1132 மெகாவாட் திறனுள்ள 53 சூரிய மின்சக்தி உற்பத்தியாளர்களின் சூரிய மின்சக்தி உற்பத்தி திட்டங்களுக்கான மின்னோட்ட பகுப்பாய்வு முடிக்கப்பட்டுள்ளது.
சூரிய மின்சக்தி உற்பத்தியாளர்கள் நில ஆவணங்களை சமர்ப்பித்து, வைப்புத் தொகை செலுத்தியவுடன், மின்சக்தி கொள்முதல் ஒப்பந்தங்கள் மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
தமிழ்நாடு சூரிய மின்சக்தி கொள்கை 2012-ல் குறிப்பிட்டுள்ள இலக்கினை விரைந்து எட்டும் வகையில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் அனைத்து நடவடிக்கைகளையும் விரைவுபடுத்தி வருகிறது.
முதலமைச்சர் ஜெயலலிதா முன்னிலையில் ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்ட இந்த நிகழ்வின்போது, அதானி குழும நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ராஜேஷ் அதானி இராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டத்தில் அமைக்கப்படவுள்ள சூரிய மின்சக்தி உற்பத்தி திட்டம் பற்றி விரிவாக எடுத்துரைத்தார்.
அப்போது, இந்த திட்டம் வெற்றிகரமாக அமைய வாழ்த்துக்கள் தெரிவித்தார் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா. இந்த நிகழ்ச்சியின் போது, அமைச்சர் நத்தம் ஆர். விசுவநாதன், தலைமைச் செயலாளர் ஞானதேசிகன், அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், எரிசக்தித் துறைச் செயலாளர் ராஜேஷ் லக்கானி,
அதானி குழும நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் வினீத் எஸ். ஜெயந்த், முதுநிலை துணைத் தலைவர் கே.எஸ். நாகேந்திரா, தென்னிந்தியாவிற்கான துணைத் தலைவர் ஏ. லஷ்மிநாராயணா மற்றும் தமிழக அரசு சார்பில் உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.