‎மக்களை‬ எப்படியெல்லாம் ஏமாற்றுகிறது பாருங்கள் இந்த அரசு!

சமையல் எரிவாயு உருளை முன்பதிவு செய்யும்போது ஜீரோ அழுத்தினால் மானியம் ரத்து செல்லிடப்பேசி மற்றும் தொலைபேசி மூலம் தானியங்கி முறையில் சமையல் எரிவாயு உருளைகளை முன்பதிவு செய்யும் நடைமுறை தற்போது அமுலில் இருந்து வருகிறது.
 
முன்பதிவு செய்வதற்கான எண்ணுக்கு பேசும்போது அதில் வரும் தகவல்களுக்கு ஏற்ப பட்டனை அழுத்தி சமையல் எரிவாயு உருளை பெறுகிறோம்.

வழக்கமாக பதிவு தொலைபேசி சேவை இணைப்பு கிடைத்தவுடன் கியாஸ் முன்பதிவு செய்ய எண்.1–ஐ அழுத்தவும் என்ற தகவல் முதலில் வரும். நாம் எண்.1ஐ அழுத்தினால் எரிவாயு பதிவு எண் சொல்லப்பட்டு நமது செல்லிடப்பேசிக்கு அந்த எண் எஸ்.எம்.எஸ். மூலம் வரும்.

அதன் பிறகு சில நாட்களில் நமது வீட்டுக்கு எரிவாயு உருளை அனுப்பப்படும். எரிவாயு உருளை விநியோகம் செய்யப்பட்டதும் அதற்கான மானியத் தொகை நமது வங்கி கணக்கில் செலுத்தப்படும்.

இந்த நிலையில் வசதி படைத்தவர்கள் சமையல் எரிவாயு மானியத்தை விட்டுக் கொடுக்க வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்தது. இதனால் ஏராளமானோர் சமையல் எரிவாயு விநியோகஸ்தர்களிடம் மானியம் வேண்டாம் என்று கடிதம் கொடுத்து வருகிறார்கள்.

இந்த நிலையில் சமையல் எரிவாயு மானியத்தை விட்டுக்கொடுப்பவர்களுக்கு வசதியாக முன் பதிவு செய்யும் போதே மானியத்தை ரத்து செய்வதற்கான நடைமுறையை எண்ணை நிறுவனங்கள் அமுல்படுத்தி வருகின்றன.

அதன்படி செல்லிடப்பேசிலோ அல்லது தொலைப்பேசியிலோ எரிவாயு உருளைக்கான முன்பதிவு செய்யும்போது ஜீரோ பட்டனை அழுத்தினால் மானியம் ரத்தாகி விடும்.

முன்பெல்லாம் எரிவாயு உருளை முன்பதிவு செய்யும்போது முன்பதிவு செய்ய எண்.1ஐ அழுத்துங்கள் என்ற தகவல் முதலில் வரும். அதன்படி வாடிக்கையாளர்களும் செளவுகரியமாக எண்.1ஐ அழுத்தி எரிவாயு உருளை முன்பதிவு செய்தார்கள்.

ஆனால் தற்போது முன்பதிவு செய்யும்போது முதலில், மானியத்தை விட்டுக் கொடுக்க ஜீரோவை அழுத்தவும் என்று வருகிறது. அதன் பிறகுதான் சிலிண்டர் முன்பதிவுக்கு எண்.1ஐ அழுத்தவும் என்று வருகிறது.

இதன் மூலம் நாம் அவசரப்பட்டு தவறுதலாக ஜீரோவை அழுத்தி விட்டால் நமது மானியம் ரத்தாகி விடும். இந்த நடைமுறையை பற்றி தெரியாதவர்கள் மற்றும் தொலைபேசி பயன்பாட்டை பற்றி முழுமையாக அறியாத பொதுமக்கள் தவறுதலாக ஜீரோவை அழுத்தினாலும் மானியம் ரத்தாகும் அபாயம் உள்ளது.

ஜீரோவை தவறுதலாக அழுத்திய பிறகு அதை திருத்திக் கொள்ள தொலைபேசியில் வாய்ப்பு இல்லை. பின்னர் மீண்டும் மானியத்தை பெற வேண்டும் என்றால் விநியோகஸ்தர்களைதான் அணுக வேண்டும்.

இந்த நடைமுறையால் சமையல் எரிவாயு உருளை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் நடைமுறை சிக்கல்களை சந்திக்க அதிக வாய்ப்பு உள்ளது. எனவே எரிவாயு உருளை முன்பதிவு செய்யும்போது மானியம் ரத்து குறித்த விவரத்தை உடனடியாக நீக்க வேண்டும் என்று வாடிக்கையாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதுகுறித்து எண்ணெய் நிறுவன அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘சமையல் எரிவாயு மானியத்தை விட்டுக் கொடுக்க விரும்புபவர்கள் விநியோகஸ்தர்களிடம் வந்து எழுதி கொடுத்து மானியத்தை ரத்து செய்ய அதிக நேரத்தை செலவிட வேண்டும். இதனால் பலர் மானியத்தை ரத்து செய்ய விரும்பவில்லை.

அவர்களின் வசதிக்காக தொலைபேசியில் ஜீரோ பட்டனில் மானியம் ரத்து தகவலை சேர்த்துள்ளோம். மானியத்தை விட்டுக் கொடுக்க விரும்பாத நடுத்தர மற்றும் ஏழை மக்களுக்கு இதில் சிரமம் மற்றும் நடைமுறை சிக்கல் இருந்தால் அதை நிவர்த்தி செய்வது பற்றி ஆலோசிக்கப்படும் என்று தெரிவித்தார்.
Tags:
Privacy and cookie settings