தற்போது இயக்குநராகி விட்டாலும், தொடர்ந்து எடிட்டராகவும் ஆண்டனி தொடர வேண்டும் என இயக்குநர் கெளதம் மேனன் கோரிக்கை விடுத்தார்.
சத்யராஜ், அனு மோள், யூகி சேது உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் 'நைட் ஷோ'. தமிழ் திரையுலகின் முக்கிய எடிட்டராக இருக்கும் ஆண்டனி, இப்படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகமாகிறார்.
இயக்குநர் விஜய் தயாரித்திருக்கும் இப்படம் மலையாளப் படமான 'ஷட்டர்' படத்தின் ரீமேக்காகும்.
'நைட் ஷோ' படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்று வருகிறது.
நடிகர் சூர்யா இப்படத்தின் ட்ரெய்லரை வெளியிட, இயக்குநர் கே.வி.ஆனந்த், கெளதம் மேனன், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட இயக்குநர்கள் பெற்றுக் கொண்டார்கள்.
இவ்விழாவில் இயக்குநர் கெளதம் மேனன் பேசியது, " நானும், ஆண்டனியும் ஒன்றாக திரையுலகுக்கு வந்தோம். நான் அவரை அறிமுகப்படுத்தவில்லை. ஒரு வழி காண்பித்து கொடுத்தேன் அவ்வளவு தான்.
எடிட்டர் ஆண்டனி இயக்குநர் ஆனதில் ஆச்சர்யம் இல்லை. நான் படத்தை எடுத்து முடித்தவுடன் ஆண்டனி முதலில் பார்ப்பார்.
திரையரங்கில் பார்ப்பது போல கை தட்டி ரசிப்பார். "மச்சான்.. நாளைக்கு 5 மணி நேரம் எடிட் பண்ணலாம். வர்றீயா" என்று எப்போது ஆண்டனி கூப்பிடுவார் என எப்போதும் காத்திருக்கிறேன்.
'காக்க காக்க' படத்துக்கு முதலில் எடிட்டிங் ஆண்டனி இல்லை. ஆனால் படத்துக்கான LOOK AND FEEL எல்லாம் இப்படி இருக்கட்டும் என்று சொல்லி நிறைய கற்றுக் கொடுத்தார்.
அதே போல எடிட்டிங் பண்ணிக் கொண்டிருக்கும் போதே, நாளை இந்த காட்சியை இப்படி நடிக்க வைத்து எடுத்துட்டு வா என்று சொல்லுவார் ஆண்டனி.
இன்னொரு விஷயம், இயக்குநராகி விட்டாலும் ஆண்டனி தொடர்ந்து எடிட்டிங் பண்ண வேண்டும். என்னிடமே வேறு ஒரு கதை சொல்லு நான் இயக்குகிறேன் என்று ஆண்டனி கேட்டார்.
இப்போதுள்ள எடிட்டர்களில் பலர் ஆண்டனியை பின்பற்றி வந்தவர்கள் தான். ஆண்டனி ஸ்டைல் என்று தனக்கான ஒரு அடையாளத்தை ஒன்றை உருவாக்கியவர் ஆண்டனி." என்றார்.
அவரைத் தொடர்ந்து பேசிய ஆண்டனி, "நான் எப்போதுமே எடிட்டர் தான். இச்சமயத்தில் ப்ரியதர்ஷன் சாருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 'லேசா லேசா' பாடலை என்னிடம் எடிட் பண்ண கொடுத்தார். அப்போது தான் எனக்கும் இயக்குநர் விஜய்க்கும் பழக்கம்.
நாம் எடிட் பண்ணும் போது எவ்வளவோ காட்சிகளை வெட்டி இருக்கிறேன். அதோட வலி எனக்கு இயக்கும் போது தான் தெரிந்தது. ஏசி அறையில் உட்கார்ந்து எடிட் பண்ணுவது எளிது, வெயிலில் படப்பிடிப்பு நடத்துவது கடினம்" என்று பேசினார்.