தமிழகத்தில் வெயிலின் தாக்கம் படிப்படியாக குறையும் !

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் படிப்படியாக குறையும் என்றும், ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வெயிலின் தாக்கம் படிப்படியாக குறையும் !
கத்தரி முடிந்து ஒரு மாதம் ஆன பின்னரும் தமிழகத்தின் பல இடங்களில் வெயிலின் தாக்கம் குறையவில்லை. நேற்று மதுரையில் அதிகபட்சமாக 102.2 டிகிரி வெயில் பதிவானது.

நேற்று முன்தினம் மாலை சென்னை உட்பட தமிழகத்தின் ஒரு சில இடங்களில் பரவலாக மழை பெய்தது. 

இதனால் வெயிலின் தாக்கம் குறையும் என மக்கள் எதிர் பார்த்தனர். ஆனால், மீண்டும் வெயில் வறுத்தெடுக்கத் தொடங்கியுள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களின் பெரும்பாலான இடங்களில் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது.

ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களிலும் ஒரு சில இடங்களில் மழை பெய்துள்ளது. 
தமிழ்நாட்டை பொறுத்தவரையில், கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்தாலும், வெப்பச்சலனம் காரணமாக ஆங்காங்கே சில இடங்களில் மழை பெய்துவருகிறது.

இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. நேற்று முன்தினம் மாலை சென்னை உள்பட பல்வேறு இடங்களில் மழை பெய்தது. 

இதனால் சில இடங்களில் வெப்பம் குறைந்திருக்கிறது. இனிவரக்கூடிய நாட்களில் தமிழகத்தில் வெயிலின் தாக்கம் படிப்படியாக குறையும். 

அதிக பட்சமாக நேற்று மதுரையில் 102.2 டிகிரி வெயிலும், குறைந்த பட்சமாக கொடைக்கானலில் 63.68 டிகிரி வெயிலும் பதிவானது.

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை விவரம் வருமாறு:- 
மழை விவரம் திருவள்ளூர் மாவட்டம் எண்ணூர் 4 செ.மீ., பூந்தமல்லி, ஆவடி, சென்னை டி.ஜி.பி. அலுவலகம், கோவை மாவட்டம் சின்னகல்லார் ஆகிய இடங்களில் 

தலா 3 செ.மீ., கேளம்பாக்கம், மாமல்லபுரம், வால்பாறை, திருவள்ளூர், திருவாலங்காடு, தாமரைப்பாக்கம், பாபநாசம் தலா 2 செ.மீ. மழையும் பெய்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Tags:
Privacy and cookie settings