மெட்ரோ ரயிலின் வசதிகளும், சிறப்புகளும்!

பழமையும், பாரம்பரியமும் மிக்க சென்னை மாநகர வரலாற்றின் மகத்தான தினங்களில் ஒன்றாக இன்று அமையப்போகிறது.
 
சென்னை மட்டுமின்றி, சென்னையை தாயகமாக கொண்ட பல்வேறு பண்பாட்டு அடையாளங்களுடன் வாழும் மக்களின் நீண்ட கால கனவாக இருந்த மெட்ரோ ரயில் சேவை இன்று துவங்க இருக்கிறது. 

ஆலந்தூரிலிருந்து கோயம்பேடு வரையிலான இந்த வழித்தடத்தில் முதல் ரயில் சேவையை முதல்வர் ஜெயலலிதா இன்று வீடியோ கான்பரன்சிங் மூலம் துவங்கி வைக்கிறார். 

குளிர்சாதன வசதி, நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் சென்னையின் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் செயல்பாட்டு வரும், இந்த மகத்தான மெட்ரோ ரயில் சேவையின் சிறப்புகளை ஸ்லைடரில் காணலாம்.

டிக்கெட் கட்டணம் 

ஆலந்தூர்- கோயம்பேடு இடையிலான 10 கிலோமீட்டர் தூரத்திற்கு முதல் கட்டமாக மெட்ரோ ரயில் சேவை துவங்கப்படுகிறது. மெட்ரோ ரயிலில் பயணிக்க குறைந்தபட்சம் ரூ.10 முதல் ரூ.40 வரை டிக்கெட் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. மாதாந்திர பயணத்திற்கான ஸ்மார்ட் கார்டுக்கு கட்டணத்தில் தள்ளுபடி விலையில் வழங்கப்படும்.


ரயில் சேவை 

ஆலந்தூர் - கோயம்பேடு இடையிலான வழித்தடத்தில் 10 நிமிடங்களுக்கு ஒரு ரயில் என 9 மெட்ரோ ரயில்கள் சேவையில் அர்ப்பணிக்கப்பட உள்ளன. இந்த இரு ரயில் நிலையங்களுக்கு இடையிலான தூரத்தை 20 நிமிடங்களில் மெட்ரோ ரயில் கடக்கும். 

ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் 30 வினாடிகள் நின்று செல்லும். காலை 6 மணிமுதல் நள்ளிரவு வரை ரயில்களை இயக்கப்படும்.

அதிகபட்ச வேகம் 

அதிகபட்சமாக 85 கிமீ வேகம் வரை மெட்ரோ ரயில்களை இயக்க முடியும். ஆனால், இந்த வழித்தடத்தில் சராசரியாக 35 கிமீ வேகத்தில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.

வசதிகள் 

ஒவ்வொரு ரயிலிலும் 4 பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். இந்த பெட்டிகளில் 1,200 பேர் வரை பயணிக்க முடியும். அனைத்து ரயில்களும் குளிர்சாதன வசதி கொண்டவை. அவசர சமயங்களில் பயணிகள் ரயில் ஓட்டுனரை தொடர்பு கொள்ளும் வசதியும் ரயில் பெட்டியில் வழங்கப்பட்டுள்ளது.


கட்டுப்பாட்டு அறை 

கோயம்பேட்டில், அனைத்து ரயில்களையும் கட்டுப்படுத்தும் வகையில், தானியங்கி கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த கட்டுப்பாட்டு மையத்திலிருந்து அனைத்து ரயில்களையும் கண்காணிக்க முடியும். 

கோயம்பேடு கட்டுப்பாட்டு அறையில் பிரச்னை ஏற்பட்டால், அசோக் நகரில் உள்ள கட்டுப்பாட்டு மையம் மூலமாக ரயில்களை இயக்க முடியும்.

பணிமனை 

கோயம்பேட்டில் மெட்ரோ ரயில் பணிமனை அமைந்துள்ளது. ஒரேநேரத்தில் 12 ரயில்களை நிறுத்துவதற்கான வழித்தடங்கள் உள்ளன. மேலும், ரயில்களை பராமரிப்பதற்காக ஒரு வழித்தடம் உள்ளது. 

இந்த வழித்தடத்தில் ரயிலை தினசரி தூய்மை படுத்துவதற்கான தானியங்கி சுத்தப்படுத்தும் எந்திரமும் பொருத்தப்பட்டிருக்கிறது.

தானியங்கி தொழில்நுட்பம் 

ஓட்டுனர் இல்லாமலேயே இயக்கும் வசதியும் மெட்ரோ ரயிலில் உண்டு. ஆனால், தற்சமயம் பாதுகாப்பு கருதி, ஓட்டுனர் கண்காணிப்பில் ரயில்கள் இயக்கப்பட உள்ளது. ஓட்டுனருக்கு உடல்நல பிரச்னை ஏற்பட்டால், ரயில் தானியங்கி பிரேக் மூலமாக நிறுத்தப்படும்.


தண்டவாளம் 

ஜல்லி இல்லாமல் தண்டவாளம் அமைக்கப்பட்டிருக்கிறது. தண்டவாளத்திற்கான மூலப்பொருட்கள் இங்கிலாந்திலிருந்தும், ரயில் பெட்டிகள் பிரேசில் நாட்டிலிருந்தும் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. ரயில் பெட்டிகளை அல்ஸ்டாம் நிறுவனம் தயாரித்து கொடுத்துள்ளது.

சுற்றுச்சூழல் 

நண்பன் வாகன பெருக்கத்தால் மூச்சுத் திணறி வரும் சென்னைக்கு, இந்த மெட்ரோ ரயில் போக்குவரத்து சுற்றுச்சூழலுக்கு நண்பனாக இருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. மேலும், சரியான கட்டணத்தில் விரைவான பயண அனுபவத்தையும் இந்த மெட்ரோ ரயில் வழங்கும்.

அடுத்தக் கட்ட சேவை 

சின்னமலையிலிருந்து விமான நிலையம் வரையிலான இரண்டாவது கட்ட மெட்ரோ ரயில் சேவை இந்த ஆண்டு இறுதிக்குள் துவங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 

அனைத்து வழித்தடங்களிலும் மெட்ரோ ரயில் சேவை துவங்கப்படும்போது அது நிச்சயம் சென்னை நகரின் போக்குவரத்தில் பெரிய அளவில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


மெட்ரோ ரயில் சேவை 

1984ல் முதல்முறையாக கொல்கத்தா நகரில் மெட்ரோ ரயில் சேவை துவங்கப்பட்டது. ஆனால், நவீன கட்டமைப்பும், வசதிகளும் கொண்ட மெட்ரோ ரயில் சேவை, 2002ம் ஆண்டு டெல்லியில் துவங்கப்பட்டது. 

இதைத்தொடர்ந்து, மும்பை, பெங்களூர் மற்றும் ஜெய்ப்பூர் நகரங்களை தொடர்ந்து தற்போது சென்னையிலும் மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்பில் இந்த மாபெரும் திட்டம் செயல்பாட்டு வருகிறது.
Tags:
Privacy and cookie settings