மேற்கு ஐரோப்பாவில் கணக்காளருக்கும், கட்டிடத் தொழிலாளிக்கும் ஒரே அளவான சம்பளம் கிடைக்கிறது! சோஷலிசம் என்பது சமநீதி.
இந்த உண்மையை அடித்தட்டு மக்களுக்கு மறைப்பது அநீதி. சோஷலிசம் மார்க்சியத்திற்கு மட்டுமே சொந்தமானதல்ல.
மேற்கு ஐரோப்பாவில், நலன்புரி அரசு என்ற பெயரில், முதலாளித்துவத்தின் கீழ் மக்களுக்கு நன்மை பயக்கும் சோஷலிச திட்டங்களை ஏற்றுக் கொண்டுள்ளனர்.
நெதர்லாந்தில் அதை “Polder Model” என்று அழைக்கிறார்கள். வசதியாக வாழும் மத்திய தர வர்க்கத்தினர், சோஷலிசத்தை வெறுப்பதற்கு முக்கிய காரணம், அவர்களது வர்க்க மேலாண்மை சிந்தனை தான்.
தமது போலியான சமூக அந்தஸ்துக்கு பங்கம் வந்து விடும் என்று அஞ்சுகிறார்கள்.
சாதாரண கூலித் தொழிலாளர்களுடன், உணவு விடுதியில் அருகருகே அமர்ந்து சாப்பிடும் நிலைமையை வெறுக்கிறார்கள்.
வர்க்க மனப்பான்மை, நவீனமயப் படுத்தப்பட்ட சாதிய மனப்பான்மையாக உள்ளது.
முன்னாள் சோஷலிச நாடுகளில், எல்லோருக்கும் சமமான சம்பளம் என்ற கொள்கையை பரிகசித்தவர்கள் பலர்.
அதுவே பொருளாதார வீழ்ச்சிக்கு காரணம் என்று கண்டுபிடித்த பொருளாதாரப் புலிகளும் இருக்கிறார்கள்.
சமூகத்தில் ஏற்றத்தாழ்வு நியாயமானது என்றும், முன்னுக்கு வர வேண்டும் என்ற போட்டி மனப்பான்மை உற்பத்தியை அதிகரிக்கும் என்றும் வாதிட்டார்கள்.
மத்தியதர வர்க்கத்தினரின் கனவுலகமான மேற்கு ஐரோப்பாவில் நிலைமை எப்படி இருக்கிறது?
இரண்டாம் உலகப்போர் முடிந்த பின்னர், சோஷலிச நாடுகளுக்குப் போட்டியாக, தமது மக்களின் வாழ்க்கைத்தரமும் உயர்த்தப் பட வேண்டும் என்று நினைத்து செயற்பட்டார்கள்.
அதில் முக்கியமானது, சம்பள வேறுபாடுகளில் உள்ள ஏற்றத்தாழ்வை முடிந்த அளவிற்கு குறைப்பது.
ஏனென்றால், அன்றாட வாழ்க்கைச் செலவுக்கே போதாத சம்பளம் பெறுவதால் தான், ஒரு சாதாரண தொழிலாளியால் வசதியாக வாழ முடியாமல் உள்ளது.
ஆகவே, அவர்களது சம்பளம் உயர்த்தப் பட வேண்டும். சோஷலிச நாடுகளில் பின்பற்றப் பட்ட அதே நடைமுறை தான், மேற்கு ஐரோப்பாவிலும் பின்பற்றப் பட்டது.
குறிப்பாக நெதர்லாந்தில், ஒரு தொழிற்துறையின் சம்பளம் எந்தளவு இருக்க வேண்டும் என்பதை, தொழிற்சங்கங்களும், தொழிலதிபர்களும் கூடி முடிவெடுக்க வேண்டும்.
அது அங்கே “Polder Model” என்று அழைக்கப் படுகின்றது. (முன்னாள் சோஷலிச நாடுகளில் இருந்த தொழிலதிபர்கள் அரசு ஊழியர்கள். ஆனால், முதலாளித்துவ நாடுகளில் அவர்கள் முதலாளிகள்.)
ஒரு தொழிற்துறையில் கிடைக்கும் சராசரி வருமானம் எந்தளவுக்கு உயர்ந்ததோ, அந்தளவுக்கு தொழிலாளரின் சம்பளமும் உயர்வாக இருக்க வேண்டும்.
உதாரணத்திற்கு, போர் முடிந்த பின்னர் அபிவிருத்திக்கு அதிக நிதி ஒதுக்கப் பட்டதால், கட்டிடத் தொழில் நிறுவனங்களின் வருமானமும் அதிகமாக இருந்தது. இப்போதும் இருக்கின்றது.
அதனால், சாதாரண கூலியாளின் சம்பளமும் அதிகரித்தது. இன்றைக்கும் அவர்கள் எடுக்கும் சம்பளம், ஒரு வங்கி ஊழியரின் சம்பளத்தை விட அதிகமாகும்.
தமிழ்நாட்டில் இருந்து என்னுடன் தொடர்பு கொண்ட நண்பர் ஒருவர், நெதர்லாந்தில் கட்டிடத் தொழிலாளரின் நிலைமை எப்படி இருக்கிறது என்று விசாரித்தார்.
தமிழ்நாட்டில் அவர்களுக்கு மிகக் குறைந்த சம்பளம் கொடுக்கப்படுவது மட்டுமல்ல, மேலாளர்கள் கூலித் தொழிலாளரை அடிப்பது, கெட்ட வார்த்தைகளினால் திட்டுவது போன்ற கொடுமைகளும் நடக்கின்றன.
நெதர்லாந்திலும், பல மேற்கு ஐரோப்பிய நாடுகளிலும் தொழிலாளர்களை அந்தளவு மோசமாக நடத்துவதில்லை.
அடித்தால் அது வன்முறையாக கருதப்பட்டு, பொலிஸ் தலையிட்டு, நீதிமன்றம் வரை சென்று தண்டம் கட்ட வேண்டியிருக்கும்.
கெட்ட வார்த்தைகளினால் திட்டுவது கூட, ஒரு மனிதரை கண்ணியக் குறைவாக நடத்துவது என்ற கட்டத்திற்கு போகாத அளவிற்குத் தான் இருக்கும்.
மேற்கு ஐரோப்பாவிலும், கட்டிடத் தொழிலாளர்கள் சுரண்டப் படுவதுண்டு. பொதுவாகவே உள்நாட்டு வேலையாட்களுக்கு அதிக சம்பளம் கொடுக்க வேண்டும்.
நெதர்லாந்து போன்ற நாட்டில் வேலை செய்யும் கட்டிடத் தொழிலாளியின் சம்பளம் அதிகமாகும்.
சிலநேரம், அலுவலக ஊழியரை விட இரண்டு மடங்கு கிடைக்கும். ஏனென்றால், அது மிகவும் கடினமான வேலை.
கட்டிடத் தொழில் நிறுவனங்கள், அதிகப்படியான சம்பளத் தொகையை குறைப்பதற்காக, கிழக்கு ஐரோப்பிய தொழிலாளர்களை முகவர்கள் மூலம் கூட்டிக் கொண்டு வருகிறார்கள்.
சில இடங்களில் போர்த்துகீசிய தொழிலாளர்களும் வேலை செய்கிறார்கள். அவர்களுக்கு இந்த நாட்டில் தீர்மானிக்கப் பட்ட மிகக் குறைந்த அடிப்படை சம்பளம் மட்டும் கொடுத்து ஏமாற்றுகிறார்கள்.
எது எப்படி இருப்பினும், தொழில்களில் பாகுபாடு காட்டாமல், எல்லோருக்கும் வாழ்க்கையை கொண்டு நடத்தும் அளவிற்கு சம்பளம் கொடுப்பது முக்கியமாகக் கருதப் படுகின்றது.
நெதர்லாந்தில், அரசும், முதலாளிகளும், தொழிற்சங்கங்களும் அடிக்கடி இது குறித்து வாக்குவாதப் படுவதுண்டு.
ஆனால், இன்று வரையில் ஒரு மூன்றாமுலக நாட்டில் இருப்பதைப் போன்று, சம்பளத்தில் பெரியளவு ஏற்றத்தாழ்வுகளை கொண்டு வரவில்லை.
இன்றைக்கும், மேற்கு ஐரோப்பாவில் வாழும் சாதாரண கூலித் தொழிலாளி கூட, ஒரு வசதியான வீட்டிற்கு வாடகை கட்டி, வருடத்திற்கு ஒரு தடவை வெளிநாட்டு சுற்றுலா சென்று வர முடிகின்றது.
எல்லோருக்கும், தொழில் பாகுபாடு பார்க்காமல், சமமான சம்பளம் கொடுப்பதன் நோக்கமும் அது தான். இந்த பூமியில் பிறந்த மனிதன் வாழ்க்கையை அனுபவித்து வாழ வேண்டும்.
வருடம் முழுவதும் உழைத்தாலும், வறுமையில் வாட வேண்டும் என்றால் அந்த வாழ்க்கையில் ஓர் அர்த்தம் இல்லை. ஏழைகள் வாழ்வதில்லை. உயிரைக் காப்பாற்ற தப்பிப் பிழைக்கிறார்கள்.
நெதர்லாந்து நாட்டில், என்னென்ன வேலைக்கு எந்தளவு சம்பளம் கொடுக்கிறார்கள் என்ற விபரத்தை இங்கே தருகிறேன்.
அரசாங்கத்திலும், தனியார் நிறுவனங்களிலும் மிக உயர்ந்த பதவி வகிப்பவர்கள் மட்டுமே பல மடங்கு அதிகமான சம்பளம் பெறுகிறார்கள்.
முதலாளித்துவ அமைப்பில் என்றும் மாறாமல் தொடர்ந்திருக்கும், அந்த ஏற்றத் தாழ்வு பற்றி இந்தப் பதிவு பேசவில்லை.
அரசு, தனியார் துறையாக இருந்தாலும், மூளை, உடல் உழைப்பாளியாக இருந்தாலும், யார் என்ன வேலை செய்தாலும், அடிப்படை சம்பளத்தில் வித்தியாசம் இருப்பதில்லை.
ஒருவர் என்ன வேலை செய்கிறார் என்பது முக்கியமில்லை. அவர் வாழ்வதற்கு தேவையான அடிப்படை வருமானம் மட்டுமே முக்கியம்.
Gemiddeld salaris per beroep http://www.gemiddeld-inkomen.nl/gemiddeld-salaris-per-beroep/
உதாரணத்திற்கு, தெருவில் குப்பை அள்ளும் தொழிலாளியின் (Vuilnisman) ஒரு வருட ஊதியம் (23.500), ஒரு சாதாரண அலுவலகப் பணியாளரின் (Datatypiste) ஒரு வருட ஊதியத்தை (18.500) விட அதிகமாகும்.