இந்திய வீரர்கள் கொடுத்த இனிப்பை வாங்க மறுத்த பாகிஸ்தான் படையினர்

இன்று புனித ரமலான் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. நமக்குள் பேதங்கள் இல்லை; ஏற்றத் தாழ்வுகள் அறவே இல்லை என்பதை உணர்த்தும் வகையில் ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி பெருநாள் வாழ்த்துக்களை பரிமாறி வருகின்றனர்.
அண்டை வீட்டாரையும், நண்பர்களையும் தங்களது இல்லத்திற்கு வரவேற்று, இனிப்புகள் மற்றும் பிரியாணி விருந்தளித்து, உபசரித்து இஸ்லாமியர்கள் பேருவகை கொள்ளும் இந்நாளில்,

இந்திய எல்லைப் பாதுகாப்புபடை வீரர்கள், போர்நிறுத்த உடன்படிக்கை மீறலால் ஏற்பட்ட புகைச்சலுக்கு மத்தியிலும் பாகிஸ்தான் படை வீரர்களுக்கு இனிப்பு வழங்க சென்றனர். ஆனால், பாகிஸ்தான் வீரர்கள் அதனை வாங்க மறுத்துள்ளனர்.

“ஆண்டுதோறும் ஈத் பெருநாளின்போது நாங்கள் பாகிஸ்தான் வீரர்களுக்கு இனிப்பு வழங்குவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு அட்டாரி-வாகா எல்லையில் பாகிஸ்தான் வீரர்கள் இனிப்பை வாங்க மறுத்துவிட்டார்கள்.

நாங்கள் எப்போதும் எல்லையில் அமைதி நிலவுவதையே விரும்புகிறோம்” என்று எல்லை பாதுகாப்பு படை துணை தலைமை இயக்குனர் பரூக்கி தெரிவித்தார்.

போர்நிறுத்த உடன்படிக்கை மீறல் காரணமாக பிரச்சினை உருவாகி உள்ளதால், ஜம்மு சர்வதேச எல்லையில் பாகிஸ்தான் வீரர்களுக்கு இந்திய வீரர்கள் இனிப்பு வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பண்டிகை காலங்களில் ஜம்மு சர்வதேச எல்லை மற்றும் அட்டாரி-வாகா எல்லையில் இரு நாட்டு வீரர்களும் நல்லெண்ண அடிப்படையில் சந்தித்து இனிப்புகளை பரிமாறிகொள்வது வழக்கமாக இருந்தது.
Tags:
Privacy and cookie settings