ரயில் நிலையங்களில் ஒரு ரூபாய்க்கு மினரல் வாட்டர்!

ரயில் நிலையங்களில், 1 ரூபாய்க்கு, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கிடைக்கும் வசதியை, விரைவில் செயல்படுத்த ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது.
ரயில் நிலையங்களில், ‘ரயில் குடிநீர்’ கிடைக்கிறது. ஒரு லிட்டர் பாட்டில் விலை, 15 ரூபாய். எனினும், குறைந்த விலைக்கு குடிநீர் வழங்க, ரயில்வே வாரியம் முடிவு செய்தது. அதன்படி முக்கிய ரயில் நிலையங்களில், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் இயந்திரம் மூலம் குறைந்த விலையில் குடிநீர் வழங்கப்படுகிறது.

தெற்கு ரயில்வேயில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், 10 ரூபாய்க்கு, காலி பாட்டிலில் பெற்றுக் கொள்ள வசதி உள்ளது. ரயில் நிலையங்களில் மேலும் குறைந்த விலையில் குடிநீர் கிடைக்கும் வகையில், 1 ரூபாய்க்கு சுத்தமான குடிநீர் வழங்க, ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது.

<அத்துடன், குடிநீரை சுத்திகரித்து வழங்கும் இயந்திரத்தை, நடைமேடையில் முன்பதிவு இல்லாத பெட்டிகள் வந்து நிற்கும் இடத்தின் அருகே நிறுவ வேண்டும் எனவும் அறிவுறுத்தி உள்ளது. இதன் மூலம் ஏழை, நடுத்தர மக்கள் பெரியஅளவில் பயனடைவர். இதுகுறித்து, இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது:முதற்கட்டமாக, ‘ஏ – 1, ஏ, பி’ ஆகிய, மூன்று வகை ரயில் நிலையங்களில், ரயில் குடிநீர் வழங்கும் இயந்திரத்தை நிறுவ உள்ளோம்.

கோட்ட பொது மேலாளர்களுடன் கலந்து பேசி, விரைவில் குடிநீர் வழங்கும் இயந்திரம் நிறுவப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.
Tags:
Privacy and cookie settings