கினபாலு மலைப் பகுதியில் நிர்வாண ஆட்டம் போட்டதால் தான் நிலநடுக்கம் ஏற்பட்டதாக இங்கிலாந்து பெண் உட்பட சிலரை மலேசிய பொலிசார் கைது செய்துள்ளனர்.
மலேசிய மக்கள் கினபாலு மலைப் பகுதியை புனிதமாக கருதி வருகின்றனர். அந்த மலைப் பகுதியில் மேலாடை இல்லாமல் வெளிநாட்டு பெண்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டிருந்தனர்.
இதற்கிடையில் அந்த மலைப்பகுதியில் மே 30ம் திகதி நிலநடுக்கம் ஏற்பட்டது. 5.9 ரிக்டர் அளவிலான இந்த நிலநடுக்கத்திற்கு 16 பேர் பலியானார்கள்.
இந்த நிலையில் நிலநடுக்கம் ஏற்பட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அங்கு நிர்வாண ஆட்டம் போட்டு கேளிக்கைகளை நடத்தியதே காரணம் என சர்ச்சை வெடித்தது.
அந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு மலேசிய மக்கள் கண்டனம் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் 24 வயதான இங்கிலாந்து இளம் பெண் எலியனார் ஹாக்கின்ஸ், 2 கனடா நாட்டு சகோதரர்கள், ஒரு டச்சுப் பெண் ஆகியோரைப் பொலிசார் கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து சரவாக் துணை முதல்வர் டான் ஸ்ரீ ஆல்பிரட் ஜபு கூறுகையில், வெளிநாட்டினரின் இந்த செயல் காரணமாக மலை பாதிக்கப்பட்டு, சினம் கொண்டதாக, அப்பகுதி பூர்வீக மக்கள் கருதுகிறார்கள்.
இது தொடர்பாக வந்த புகாரைத் தொடர்ந்தே தற்போது அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று கூறியுள்ளார்.
கைதான அனைவரையும் நான்கு நாள் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.
அவர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் 3 மாத சிறைத் தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.
Tags: