பத்திரப்பதிவும் செலவும் !

கட்டுமான ஒப்பந்தத்தையும் பதிவுசெய்ய வேண்டும் என்பதும் உங்களுக்குத் தெரிந்த விஷயம் தான். 


அதற்கு எவ்வளவு பணம் வசூலிக்கப்படும் என்று உங்களுக்குத் தெரியுமா? இதைப் பற்றியும்,

அடுக்குமாடி வீட்டைப் பத்திரப்பதிவு செய்ய ஆகும் செலவைப் பற்றியும் பார்ப்போமா?

கட்டுமான ஒப்பந்தத்தை (CONSTRUCTION AGREEMENT) பதிவு செய்ய வேண்டும் எனத் தமிழக அரசு கடந்த 2013-ம் ஆண்டு அக்டோபரில் தான் உத்தரவு பிறப்பித்தது.

இதற்காக 2 சதவீதத் தொகையை வீடு வாங்கியவர் செலுத்த வேண்டும்.

இரண்டு சதவீதம் என்பது கட்டுமானத்துக் காக எவ்வளவு செலவு செய்யப்பட்டதோ அதில் 2 சதவீதத் தொகை. 

உதாரணமாக 25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீட்டை வாங்குகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம்.

அதில் அன்டிவைடட் ஷேர் (Undivided Share-UDS) எனப்படும் மனையில் பிரிக்கப்படாத பகுதிக்குச் செலுத்தும் தொகை 5 லட்சம் ரூபாய்

என்று வைத்துக் கொண்டால் கட்டுமானச் செலவு 20 லட்சம் ரூபாய் என்றாகிறது. 

இந்த 20 லட்ச ரூபாய்க்கு 2 சதவீதம் கட்டுமான ஒப்பந்தப் பதிவுச் செலவு என்றால் 40 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும்.

இந்த கட்டுமான ஒப்பந்தப் பதிவுத் தொகையைச் செலுத்துவது கூடுதல் சுமை தான். இதன் காரணமாகப் பத்திரப் பதிவு செலவும் அதிகரிக்கிறது. 

அதேசமயம் கட்டுமான ஒப்பந்தத்தைப் பதிவு செய்வதன் மூலம் சில நன்மைகளும் உண்டு. சில பில்டர்கள் யு.டி.எஸ். எனப்படும்


மனையில் பிரிக்கப்படாத பகுதியை அதிகமாகப் பதிவு செய்வது தடுக்கப் படுகிறது என்பதும் உண்மை. 

கட்டுமான ஒப்பந்தப் பத்திரத்தில் நாம் வாங்கிய மனை எண், எந்த பிளாக், எந்தத் தளம், வீட்டு எண்,

சூப்பர் பில்ட்-அப் ஏரியா (வீடு அமைந்துள்ள பரப்பு) என அனைத்தும் பதிவு செய்யப்படுகிறது. இதனால், வீட்டை மாற்றி விற்பது தடுக்கப்படுகிறது. 

எதிர் காலத்தில் வீட்டை விற்கும்போது அப்போது வீடு கட்ட எவ்வளவு செலவு ஆனது என்பதைப் பத்திரத்தைக் காட்டி விற்கவும் வழி ஏற்படுகிறது என்பதையும் மறுக்க முடியாது.

கட்டுமான ஒப்பந்தப் பதிவை யு.டி.எஸ்.ஸைப் பதிவு செய்யும்போதே,   பதிவு செய்துவிட வேண்டும். 

கட்டுமான ஒப்பந்தப் பதிவு தவிர யூ.டி.எஸ். பதிவுக்கும் தனியாகச் செலவு ஆகும். மொத்தம் எத்தனை சதுர அடி யூ.டி.எஸ். இருக்கிறதோ,

அதற்கான அரசு கைடுலைன் மதிப்புக்குத் தகுந்தாற்போல அதில் 7 சதவீதத்தை முத்திரைத்தாள் கட்டணமாக வசூலிப்பார்கள்.
 
இதைப் பதிவுசெய்ய 1 சதவீதப் பதிவுக் கட்டணத்தையும் செலுத்த வேண்டும்.


அடுக்குமாடிக் குடியிருப்பில் வீடு வாங்குப வர்களுக்கு சேவை வரி, மதிப்புக் கூட்டு வரி அல்லது விற்பனை வரியையும் சேர்த்துக் கட்ட நேரிடலாம். 

இப்போது உங்களுக்கு ஒரு சந்தேகம் ஏற்படலாம். பழைய அடுக்குமாடிக் குடியிருப்பில் வீடு வாங்கினால் எவ்வளவு தொகை பத்திரப் பதிவுக்குச் செலவாகும் என்று நினைப்பீர்கள். 

புதிய அடுக்குமாடி வீட்டுக்கு இருப்பதுபோல் பழைய வீட்டுக்கு இவ்வளவு கட்டணங்கள் இல்லை.

மனை மற்றும் வீட்டின் மதிப்பில் 7 சதவீதம் முத்திரைத்தாள் கட்டணமாகச் செலுத்த வேண்டும். 1 சதவீதம் பதிவுக்கட்டணமாக வசூலிப்பார்கள். 

இனி அடுக்குமாடி வீடு வாங்குபோது பில்டர்கள் கேட்கும் பத்திரப் பதிவுக்குச் செலவு உண்மையானது தானா என்பதை நீங்களே ஒரு முறை கணக்கிட்டுப் பார்த்துப் பின்னர் கொடுக்கலாமே. 
Tags:
Privacy and cookie settings