மெட்ரோ ரெயில் பணியை இத்தாலியிடம் வழங்க முடிவு !

சென்னை மெட்ரோ ரெயில் பணிகளில் மே தின பூங்கா முதல் சைதாப்பேட்டை வரை சுரங்கம் தோண்டும் பணி நடைபெற்று வருகிறது.
 
இந்த வழித்தடத்தில் அரசினர் தோட்டம், எல்.ஐ.சி. ஜெமினி, சைதாப்பேட்டை உள்பட 7 ரெயில் நிலையங்களும் சுரங்கத்துக்குள் அமைக்கப்படுகிறது.

இதில் ரஷியாவை சேர்ந்த மாஸ்மெட்ரே ஸ்ட்ராய் என்ற நிறுவனம் சுரங்கம் தோண்டும் பணியை செய்து வந்தது. சுரங்கத்துக்குள் ரெயில் நிலையங்கள் அமைக்கும் பணியை கேமன் நிறுவனம் செய்து வந்தது.

இந்த நிலையில் சுரங்கம் தோண்டும் பணியில் இருந்து ரஷிய நிறுவனம் வெளியேறியது. இதையடுத்து சுரங்கம் தோண்டும் பணியும் கேமன் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

கேமன் நிறுவனம் எதிர்பார்த்த வேகத்தில் பணிகளை செய்யவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்பு கேமன் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட ஒப்பந்தத்தை மெட்ரோ ரெயில் நிறுவனம் ரத்து செய்தது.

காண்டிராக்டை ரத்து செய்யப்பட்டதற்கு தடை கேட்டு கேமன் நிறுவனம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது. அண்ணா சாலை பகுதியில் பாறைகள் நிறைந்து காணப்படுவதால் சுரங்கம் தோண்டும் பணியில் சுணக்கம் ஏற்பட்டதாக அந்த நிறுவனம் கூறியது.

ஆனால் போதிய கால அவகாசம் வழங்கப்பட்டிருந்ததாக மெட்ரோ ரெயில் நிறுவனம் கூறுகிறது. இந்த நிலையில் இந்த பணியை மேற்கொள்ள இத்தாலிய நிறுவனம் வரவழைக்கப்பட்டுள்ளது.

இத்தாலி நிறுவன நிபுணர்கள் கடந்த 15 நாட்களாக சென்னையில் முகாமிட்டு சுரங்கம் தோண்டுவதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்து வருகிறார்கள்.

இந்த வழித்தடத்தில் 75 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளது. புதிதாக ஒரு சுரங்கம் தோண்டும் எந்திரம் ஜெர்மனியில் இருந்து வந்துள்ளன. தற்போது தற்காலிகமாக சைதாப்பேட்டை முதல் ஜெமினி வரை சுரங்கம் தோண்டும் பணியை அப்கன் நிறுவனத்திடம் வழங்கி உள்ளனர்.
Tags:
Privacy and cookie settings