ஒரே கலர் 'ஹெல்மெட்'டால் குழப்பம்.. கணவன் அல்லாதவருடன் 'டபுள்ஸ்!'

தாராபுரம் பெட்ரோல் பங்கில், இரு ஆண்கள், ஒரே நிறத்தில் ஹெல்மெட் மற்றும் வெள்ளை சட்டை அணிந்திருந்ததால், இருசக்கர வாகனம் மாறி, வேறொரு ஆணுடன் சென்ற பெண்ணால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


திருப்பூர் மாவட்டம், தாராபுரம், சின்னப்புத்துார் கிராமத்தை சேர்ந்தவர் ரங்கசாமி, 50, தன் மனைவி பழனியம்மாளுடன், 42, இருசக்கர வாகனத்தில் சென்று, ஐந்து ரோடு சந்திக்கும் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில், பெட்ரோல் நிரப்பினார். பழனியம்மாள், பங்கின் வெளிப்புறம் நின்று கொண்டார்.

வெள்ளை சட்டை :

அதேநேரம், காளிபாளையம் கிராமத்தை சேர்ந்த முத்துசாமி, 45, தன் மனைவி பொன்னத்தாளுடன், அதே பெட்ரோல் பங்குக்கு வந்தார். இவரும், தன் மனைவியை, பங்க் வாயிலில் நிறுத்திவிட்டு, பெட்ரோல் நிரப்பினார்.

ரங்கசாமி, முத்துசாமி ஆகியோர், வெள்ளை சட்டை அணிந்திருந்ததுடன், இருவரும், கருப்பு நிற ஹெல்மெட் அணிந்திருந்தனர். பெட்ரோல் நிரப்பிவிட்டு வந்த ரங்கசாமியின் இருசக்கர வாகனத்தில், பொன்னாத்தாள் எறிச் சென்றார்.

சிறிது துாரம் சென்றதும், வழிமாறி பயணித்த, 'கணவனிடம்', 'எங்கே செல்கிறீர்கள்' என, கேள்வி கேட்ட போது, குரல் மாறியதை அறிந்து, பொன்னாத்தாளுக்கு, துாக்கிவாரிப்போட்டது.

அதிர்ச்சி:

உடனே, இருசக்கர வாகனத்தை நிறுத்தி, ஹெல்மெட்டை கழட்டிய போது, இருசக்கர வாகனம் மாறி, பொன்னாத்தாள் ஏறியது தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த பொன்னத்தாள், தன் கணவர் மொபைலுக்கு தொடர்பு கொண்டு, நடந்த விவரத்தை கூறினார்.

பின், இருவரும் ஐந்து ரோடு பெட்ரோல் பங்க் வந்து, தங்கள் மனைவியரை அழைத்துச் சென்றனர். ஒரே கலரில் ஹெல்மெட், வெள்ளை சட்டை, ஒரே நிறுவன இருசக்கர வாகனம் என்ற குழப்பத்தால், மனைவியே மாறிப் போனதை அறிந்து அப்பகுதி மக்கள், குலுங்கி குலுங்கி சிரித்தனர் .
Tags:
Privacy and cookie settings