கலாமுக்கு தலைவர்கள், பிரபலங்கள் பொதுமக்கள் இறுதி அஞ்சலி !

ராமேசுவரம் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் உடலுக்கு அரசியல் தலைவர்கள், பல்வேறு துறைகளைச் சார்ந்த பிரபலங்கள், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
 
 முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் உடலுக்கு அஞ்சலி செலுத்த ராமேசுவரத்தில் அரசியல் தலைவர்களும், பொதுமக்களும் குவிந்த வண்ணம் உள்ளனர். 

மதுரையில் இருந்து மண்டபம் கொண்டு செல்லப்பட்ட கலாம் உடலுக்கு தமிழக அமைச்சர்கள் அஞ்சலி செலுத்தினர். பின்னர் அங்கிருந்து ராணுவ வாகனத்தில் கலாம் உடல் ராமேஸ்வரம் கொண்டு செல்லப்பட்டது.

வழி நெடுகிலும் சாலையில் இரு புறங்களிலும் பொதுமக்கள் குவிந்திருந்து அஞ்சலி செலுத்தினர். 

ராமேசுவரத்தில் பேருந்து நிலையம் அருகே மைதானத்தில் கலாமின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இரவு 8 மணி வரை பொதுமக்கள் அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ராமேசுவரத்தில், 

அவரது உடலுக்கு புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, மத்திய அமைச்சர்கள் வெங்கய்ய நாயுடு, பொன்.ராதாகிருஷ்ணன், மனோகர் பரிக்கர், பாஜகவின் தேசியச் செயலாளர் எச்.ராஜா, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், மதிமுக தலைவர் வைகோ, தேமுதிக தலைவர் விஜயகாந்த், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், 

தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், மனிதநேய மக்கள் கட்சியின் மூத்த தலைவர் ஜவாஹிருல்லா, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு, 

நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், தமிழக அமைச்சர்கள் பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன் வைத்திலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி, பழனியப்பன், கவிஞர் வைரமுத்து, நடிகர்கள் வடிவேலு, விவேக் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். 

நீதிமன்றங்களுக்கு நாளை விடுமுறை

தமிழகத்தில் உயர் நீதிமன்றம் உட்பட அனைத்து நீதிமன்றங்களுக்கும் நாளை விடுமுறை என்று சென்னை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் பொன். கலையரசன் கூறியுள்ளார். 

ஸ்டாலின் கோரிக்கை 

''கலாம் அடக்கம் செய்யப்படும் இடத்தில் மணிமண்டபம் அமைக்க வேண்டும். சென்னை குரோம்பேட்டை எம்ஐடி கல்லூரிக்கு அப்துல் கலாம் பெயரை சூட்ட வேண்டும்'' என்று ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். 

ஜி.கே.வாசன் கோரிக்கை 

''நாடு முழுவதும் அனைத்துப் பள்ளிப் புத்தகங்களிலும் கலாமின் சாதனைகள் இடம்பெற வேண்டும்'' என்று ஜி.கே.வாசன் கோரிக்கை விடுத்துள்ளார். 

மேகாலயா தலைநகர் ஷில்லாங்கில் உள்ள ஐ.ஐ.எம். கல்வி நிறுவனத்தில் நேற்று முன்தினம் (திங்கள்கிழமை) நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அப்துல் கலாம் திடீரென மயங்கி விழுந்தார். 

முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு அவர், உடனடியாக அருகில் உள்ள பெதானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த டாக்டர்கள், கலாம் மாரடைப்பால் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். 

 அப்துல் கலாமுக்கு அஞ்சலி செலுத்தும் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் | படம்: எஸ்.ஜேம்ஸ்

அப்துல் கலாமின் உடல் மேகால யாவில் இருந்து நேற்று காலை டெல்லிக்கு கொண்டு வரப்பட்டது. அவரது உடலுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். 

மதுரை கொண்டு செல்லப்பட்டது :

கலாமின் இறுதிச் சடங்கு அவரது சொந்த ஊரான ராமேசுவரத்தில் நாளை நடைபெறுகிறது. இதனையொட்டி அவரது உடல் ராணுவ விமானம் மூலம் இன்று (புதன் கிழமை) மதுரை கொண்டு வரப்பட்டது. 
Tags:
Privacy and cookie settings