செங்கோட்டையில் முன்னாள் அமைச்சர் செந்தூர் பாண்டியன் உடல் தகனம்

தமிழக முன்னாள் அமைச்சர் செந்தூர் பாண்டியன் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ஆஸ்பத்திரியில் கடந்த 6 மாதங்களாக சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் காலை அவர் மரணம் அடைந்தார்.
அவரது உடலுக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா சார்பில் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள் அஞ்சலி செலுத்தினர். இதனையடுத்து நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் உள்ள அவரது வீட்டுக்கு நேற்றுமுன்தினம் நள்ளிரவு உடல் கொண்டு வரப்பட்டது.

அங்கு தமிழக அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், அரசு அதிகாரிகள் மற்றும் அ.தி.மு.க. தொண்டர்கள் அஞ்சலி செலுத்தினர். சமத்துவ மக்கள் கட்சித்தலைவர் ஆர்.சரத்குமார் எம்.எல்.ஏ. மற்றும் காங்கிரஸ், ம.தி.மு.க., கம்யூனிஸ்டு உள்ளிட்ட மாற்றுக்கட்சியினரும் நேற்று காலை அஞ்சலி செலுத்தினர்.

இதைத்தொடர்ந்து கற்குடி கிராமத்தில் உள்ள தோட்டத்தில் செந்தூர்பாண்டியன் உடல் தகனம் செய்யப்பட்டது. அவருடைய மகன்கள் அப்பாராஜ், கிருஷ்ணமுரளி ஆகியோர் சிதைக்கு தீ மூட்டினர்.

செந்தூர் பாண்டியனுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் செங்கோட்டை நகரில் வியாபாரிகள் கடைகளை அடைத்து இருந்தனர்.
Tags:
Privacy and cookie settings