காய்கறிகளில் நச்சுத்தன்மை இருப்பதாக கேரளா புகார் !

கேரளா அரசின் புகாரை அடுத்து ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் காய்கறிகள் பரிசோதனை செய்து தரச்சான்று அளிக்கப்படுகிறது.
 
தமிழகத்தில் இருந்து இறக்குமதி செய்யப்படும் காய்கறிகளில் பெரும் அளவில் நச்சுத்தன்மை உள்ளது. எனவே அவற்றை வாங்க கேரளா அரசு கட்டுப்பாடுகளை விதித்தது. இதனால் தமிழக விவசாயிகளும், வியாபாரிகளும் பாதிக்கப்பட்டனர்.

தமிழகத்தில் விளைவிக்கப்படும் காய்கறிகளில் பெரும்பகுதி கேரளாவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

குறிப்பாக ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் இருந்து அதிக அளவு காய்கறிகள் கேரள வியாபாரிகளால் வாங்கப்படுகின்றன. கேரள அரசின் இந்த காட்டுப்பாடு காரணமாக வர்த்தகம் பாதிக்கப்பட்டது.

இதையடுத்து காய்கறி வியாபாரிகள் மாவட்ட நிர்வாகத்திடம் முறையிட்டனர். அதன் அடிப்படையில் உணவு பொருள் பாதுகாப்புத்துறை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை ஆகியவை இணைந்து குழு அமைக்கப்பட்டது.

இக்குழுவினர் வியாபாரிகளின் பிரச்சினையை போக்குவதற்காக ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் மற்றும் கேரளா செல்லும் காய்கறி வாகனங்களுக்கு தரச்சான்று வழங்க முடிவு செய்துள்ளனர்.

இது குறித்து மாவட்ட உணவு பொருள் பாதுகாப்பு அலுவலர் சியாம்இளங்கோ பழனியில் நிருபர்களிடம் கூறுகையில், கேரள அரசின் கெடுபிடிகளை சமாளிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மார்க்கெட்டில் உள்ள வியாபாரிகளுக்கு தரச்சான்று வழங்கப்படும். நாள்தோறும் காய்கறிகள் மாதிரி எடுக்கப்பட்டு தரத்தன்மை குறித்து ஆய்வு செய்து சான்று வழங்கப்படும். காய்கறிகள் கொள்முதல் செய்யப்படும் விவசாயிகளின் விவரங்கள் தரப்படும்.
 
காய்கறிகளில் உரத்தின் அளவு அதிகமாக இருந்தால் வேளாண்மைத்துறை மூலம் சம்பந்தப்பட்ட விவசாயிகளை அணுகி ரசாயன உரங்களின் பயன்பாட்டை குறைக்க அறிவுறுத்தப்படும்.

விவசாயிகள் மூலம் சம்பந்தப்பட்ட உரக்கடைகளை கண்டறிந்து அங்கும் ஆய்வு நடத்தப்படும். தமிழகத்தில் ஆன் லைனில் பதிவு செய்துள்ளோர்களுக்கு இன்று முதல் லைசென்சு வழங்கப்படும் என்றார்.
Tags:
Privacy and cookie settings