கோவையில் போலி டி.ஐ.ஜி. கள்ள காதலியுடன் கைது !

கோவையில் போலி டி.ஐ.ஜி. மற்றும் அவருடைய கள்ளக்காதலியை போலீசார் கைது செய்தனர். அவர்கள் தமிழகம் முழுவதும் பலகோடி ரூபாய் மோசடி செய்தது விசாரணையில் தெரியவந்து உள்ளது.


கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள நகை உற்பத்தி மைய அலுவலகத்துக்கு சென்று தன்னை டி.ஐ.ஜி. என்றுக்கூறி சோதனை செய்த போலி டி.ஐ.ஜி.யான சென்னை சாலி கிராமத்தை சேர்ந்த சண்முகதுரை (வயது 49) என்பவரை சரவணம்பட்டி போலீசார் மடக்கி பிடித்தனர்.

விசாரணையில், அவர் தன்னை டி.ஐ.ஜி. என்று கூறி, தனது கள்ளக்காதலி மீனாகுமாரியுடன் (50) சேர்ந்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் பணம் பறித்தது தெரியவந்தது.

இதையடுத்து அவரையும், அவருடைய கள்ளக்காதலியையும் போலீசார் கைது செய்தனர். சண்முகதுரையிடம் போலீசார் நடத்திய விசாரணையில் வெளிவந்த தகவல்கள் விவரம் வருமாறு:

சண்முகதுரைக்கு திருமணம் முடிந்து மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். பி.ஏ. பட்டதாரியான அவர் எந்த வேலைக்கும் செல்லவில்லை. ஏமாற்றி பணம் பறிப்பதே வேலையாக செய்து வந்துள்ளார். 

அவருடைய நண்பர்கள் பலர் சென்னையில் போலீஸ் உயர் அதிகாரிகளாக பணியாற்றி வருகிறார்கள். அவர்களுக்கு போலீசார் அளிக்கும் மரியாதையை பார்த்து, அதுபோன்று நாமும் நடித்தால் நமக்கும் நல்ல மரியாதை கிடைக்கும் என்று நினைத்து உள்ளார்.

அதன்படி போலீஸ் அதிகாரி போன்று முடியை வெட்டி, மீசையை வைத்துக்கொண்டார். பின்பு சென்னையில் உள்ள ஒரு நிறுவனத்துக்கு சென்று தான் போலீஸ் அதிகாரி என்று சொல்லி, ஆய்வு செய்ய வந்துள்ளேன் என்று கூறி உள்ளார். 

அதை நம்பிய அந்த நிறுவன அதிகாரிகள் பணம் கொடுத்து உள்ளனர். அந்த பணத்தை வாங்கிய சண்முகதுரை அதை வைத்து உல்லாச வாழ்க்கை வாழ்ந்து உள்ளார்.

இதுபோன்று நடித்து பணம் பறித்தால் பலகோடி ரூபாய் சம்பாதிக்கலாம் என்று ஆசைப்பட்டு தொடர்ந்து இதுபோன்று நடிக்க முடிவு செய்தார். 

அப்போது தான் கும்பகோணத்தை சேர்ந்த கணவனை இழந்த மீனாகுமாரி (50) என்ற பெண்ணுடன் சண்முகதுரைக்கு பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அவர்கள் இருவரும் பல இடங்களுக்கு சென்று இது போன்று நடித்து பணம் பறித்து உள்ளனர். 

குறிப்பாக கோவை, திருச்சி, மதுரை, திண்டுக்கல், கும்பக்கோணம், நீலகிரி உள்பட தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் மத்திய புலனாய்வு ஊழல் தடுப்புத்துறை டி.ஐ.ஜி. என்றுக் கூறி ஏமாற்றி பலகோடி ரூபாய் வசூலித்து மோசடி செய்தது தெரியவந்து உள்ளது. 

மேலும் இவர் தனது கள்ளக்காதலியான மீனாகுமாரியுடன் பல்வேறு இடங்களுக்கு சென்று, அந்தந்த பகுதியில் இருக்கும் போலீஸ் நிலையங்களுக்கு போன் செய்து,

தான் டி.ஐ.ஜி. என்றும், நல்ல ஓட்டலில் குளிர்சாதன வசதியுடன் அறை பதிவு செய்து கொடுக்கும்படி கூறி உள்ளார். அவர்களும் ஓட்டலில் அறை எடுத்து கொடுத்து உள்ளனர். 

அந்த அறையில் சண்முகதுரை தனது கள்ளக்காதலியுடன் உல்லாசமாக இருந்ததும் விசாரணையில் தெரியவந்து உள்ளது.

தொடர்ந்து அவர் எத்தனை பேரிடம் எவ்வளவு பணம் மோசடி செய்து உள்ளார் என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 
Tags:
Privacy and cookie settings