லார்ட்ஸ் போட்டியில் வாட்சனுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும்: மெக்ராத்

1 minute read
ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா 169 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.


இந்த தோல்வியால் விமர்சனத்திற்கு உள்ளாகிய அந்த அணி, லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற இருக்கும் 2-வது போட்டியில் கட்டாயம் வெற்றி பெற தீவிர முயற்சிகளை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக, முதல் போட்டியில் மோசமாக விளையாடிய ஆல் ரவுண்டர் வாட்சனை அணியில் இருந்து நீக்க ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது. அவருக்குப் பதிலாக மிட்செல் மார்ஷை அணியில் சேர்க்க முழு முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் வாட்சனுக்கு கட்டாயம் இன்னொரு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் கிளென் மெக்ராத் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘கடைசியாக லார்ட்ஸ் போட்டியில் வாட்சனுக்கு மேலும் ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டும். ஆனால், இரண்டு இன்னிங்சிலும் வாட்சன் எல்.பி.டபிள்யூ. ஆகியது தேர்வாளர்களை கவலைக்குள்ளாக்கியுள்ளது. இந்த வாரத்தில் தேர்வாளர்கள் மாற்றத்தை கொண்டு வருவார்கள் என்று நினைக்கிறேன்.

வாட்சன் தனித்திறமை வாய்ந்த வீரர். ஆனால், அவர் எல்.பி.டபிள்யூ முறையில் அவுட்டாகுவதில் இருந்து தன்னைக் காப்பாற்றி டெஸ்ட் போட்டியில் நிலைத்து நிற்க இன்னும் அதிகமாக உழைக்க வேண்டும்.

இலக்கை நோக்கி அவர் எப்படி செல்கிறார் என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால், துரதிர்ஷ்டவசமாக நடுவர்கள் சில சமயம் தவறு செய்யும்போது அவரால் சாதகமான பலனை பெற முடியவில்லை’’ என்றார்.

கார்டிப் நகரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் வாட்சன் இரண்டு இன்னிங்சிலும் எல்.பி.டபிள்யூ முறையில் அவுட் ஆனார். அந்த அப்பீலுக்கு நடுவர் எல்.பி.டபிள்யூ அவுட் கொடுத்திருக்க வேண்டியதில்லை என்று சில விமர்சனங்கள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்து ஆடுகளத்தில் பந்து அதிக அளவில் ஸ்விங் ஆகும். இதனால் பந்தை சரியாக கணித்து விளையாடாவிட்டால் எல்.பி.டபிள்யூ ஆக வாய்ப்பு உள்ளது. இதனால், வாட்சனை நீக்க ஆஸ்திரேலியா ஆலோசனை நடத்தி வருகிறது.

லார்ட்ஸ் மைதானத்தில் வாட்சன் விளையாட அந்த அணியின் கேப்டன் கிளார்க் ஆதரவு தெரிவித்திருந்தார்.
Tags:
Privacy and cookie settings