நபிகள் நாயகம் வாழ்க்கை நெறியை பின்பற்றி வாழ்வோம்.. விஜயகாந்த்!

செல்வ வளம் என்பது அதிகமான செல்வத்தை சேர்ப்பதல்ல, போதுமென்ற மனதைப் பெறுவதே உண்மையான செல்வமென என்ற நபிகள் நாயகம் வாழ்க்கை நெறியை பின்பற்றி வாழ வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
 
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி:

இஸ்லாம் மார்க்கத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்று புனித ரமலான் மாதத்தின் நோன்பு ஆகும். ஏழ்மையை அறிந்துகொள்ளவும், பசியின் கொடுமையை உணர்ந்துகொள்ளவும், உடல் நலத்தை பேணிக்காத்து மனிதர்களை மேம்படுத்துவதுதான் இந்த புனித ரமலான் நோன்பின் சிறப்பாகும்.

புனித குர்ஆனில் சொல்லப்பட்டுள்ள ஒரே மாதம் ரமலான் மட்டுமே. மக்கா, மதீனா சென்று தர்மம் செய்ய இயலாதவர்கள், ரமலான் மாதத்தில் நோன்பிருந்து தர்மம் செய்வது அதற்கு சமமாகும்,

"செல்வ வளம் என்பது அதிகமான செல்வத்தை சேர்ப்பதல்ல, போதுமென்ற மனதைப்பெறுவதே உண்மையான செல்வமென", வாழ்க்கை நெறிகளை அண்ணல் நபிகள் பெருமான் இஸ்லாமிய பெருமக்களுக்கு கூறியுள்ளதை அனைவரும் பின்பற்றி வாழவேண்டும்.

"இயன்றதைச் செய்வோம் இல்லாதவர்கே", என்ற அடிப்படையில் ஏழை, எளியவர்கள் மீது பரிவுகாட்டி, உண்ண உணவளித்து, உடுக்க உடைகொடுத்து, தானதர்மங்கள் செய்து, முப்பது நாட்கள் புனிதநோன்பினை முடித்துக் கொண்டு ரம்ஜான் திருநாளைக் கொண்டாடும் இந்த இனிய நாளில்,

அன்பு ஓங்கிட, அறம் தழைத்திட, சமாதானம் நிலவிட, சகோதரத்துவம் வளர்ந்திட வேண்டுமென இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த ரம்ஜான் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.
Tags:
Privacy and cookie settings