மக்களின் ஜனாதிபதி அப்துல் கலாமின் மறைவைத் தொடர்ந்து, அவரின் இறுதிச் சடங்குகள், ராமேஸ்வரத்தில் நாளை மறுநாள் (ஜூலை 30ம் தேதி) நடைபெற உள்ளது.
நாளைய தினம் பொதுமக்கள் அஞ்சலி செலுத்திய பின்னர் பாரம்பரிய முறைப்படி இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டு உடல் நல்லடக்கம் செய்யப்படும் என்று அவரது பேரன் ஷேக் சலீம் கூறியுள்ளார்.
அப்துல் கலாம் இறுதிச் சடங்கில் பிரதமர் மோடியும், 6 மாநில முதல்வர்களும் பங்கேற்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இடம் தேர்வு
மறைந்த அப்துல் கலாமின் உடல் தற்போது டெல்லிக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அங்குள்ள ராஜாஜி மார்க் இல்லத்தில் 4 மணி முதல் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப் படுகிறது.
மக்கள் செலுத்திய பின்னர் அப்துல் கலாமின் உடல், நாளை பிற்பகல் ராமேஸ்வரம் கொண்டு செல்லப்பட உள்ளது.
கலாமின் உடலை அடக்கம் செய்வதற்கான இடம் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருவதாக ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் நந்தகுமார் கூறியுள்ளார்.
ராமேஸ்வரத்தில் அஞ்சலி
அப்துல் கலாமின் உடல் ராமேஸ்வரத்தில் ராமதீர்த்தம் அருகே உள்ள அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில்
பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும் என அவரது உதவியாளர் பொன்ராம் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
உடல் அடக்கம்
எங்கே அப்துல் கலாம் உடலை அடக்கம் செய்ய இடத்தை தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது. ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள், இடங்களை நேரில் ஆய்வு செய்கின்றனர்.
ரயில் நிலையம் அருகே காட்டு பள்ளிவாசல், உதயம் பாலிடெக்னிக், நடராஜபுரம் போன்ற இடங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
ஜூலை 30ல் இறுதிச்சடங்கு
பொதுமக்கள் அஞ்சலி செலுத்திய பின்னர் அப்துல் கலாமின் இறுதிச்சடங்கு நாளை மறு தினம் வியாழக் கிழமையன்று 11 மணிக்கு நடைபெறும் என அவரது பேரன் ஷேக் சலீம் கூறியுள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சமும் இந்த தகவலை அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளது.
பாதுகாப்பு ஏற்பாடுகள் தயார்
இறுதிச்சடங்கில் பிரதமர் மோடி, 6 மாநில முதல்வர் ராமேஸ்வரம் வருகை தர உள்ளதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வது தொடர்பாக
மாநில போலீஸ் துறை உயரதிகாரிகளுடன் மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர்.