திருச்சி ஏர்போர்ட்டில் இ-சுற்றுலா விசா வழங்கும் திட்டம் !

அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கு, இணையதளம் மூலம் சுற்றுலா விசா வழங்கும் திட்டம், திருச்சி உள்ளிட்ட, ஏழு விமான நிலையங்களில் விரைவில் அமல்படுத்தப்பட உள்ளது.
இந்தியாவுக்கு வரும் சுற்றுலா பயணிகள், விரைவில் விஸா பெறும் வகையில், சென்னை, பெங்களூரு, கொச்சி, டில்லி, கோல்கத்தா, மும்பை, திருவனந்தபுரம் உள்பட, ஒன்பது விமான நிலையங்களில், இணையதளம் மூலம் சுற்றுலா விசா வழங்கும் திட்டம் அமலில் உள்ளது.

மேலும், இரண்டாம் கட்டமாக, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிகமாக வந்து செல்லும், ஏழு விமான நிலையங்களில், இணையதளம் மூலம் விஸா வழங்கும் திட்டத்தை அமல்படுத்த, மத்திய அரசு முடிவு செய்தது.

அதன்படி, திருச்சி, ஜெய்ப்பூர், ஆமதாபாத், அமிர்தரஸ், லக்னோ, வாரணாசி மற்றும் கயா ஆகிய விமான நிலையங்களில், இணைய தளம் மூலம் சுற்றுலா விஸா வழங்கும் திட்டத்தை கொண்டு வர, இந்திய விமான நிலைய ஆணைய குழுமம் மற்றும் குடியேற்ற பிரிவினர் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

திருச்சி விமான நிலையத்தில், இணையதள சுற்றுலா விசா வழங்க, நான்கு கவுன்டர்கள், இணையதள வசதி, கம்ப்யூட்டர்கள், ஸ்கேனர்ஸ், எலெக்ட்ரானிக் பாஸ்போர்ட் ரீடர்கள் மற்றும் சி.சி.டி.வி., கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன. 


இது தொடர்பாக, திருச்சி விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட பணிகளை, வெளிநாட்டினர் பதிவுக்கான சென்னை மண்டல அதிகாரிகள், கடந்த சில மாதங்களுக்கு முன், ஆய்வு செய்துள்ளனர்.


இது குறித்து, திருச்சி விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது:திருச்சி விமான நிலையத்துக்கு ஆண்டுதோறும், 12 லட்சம் பேர் வெளிநாட்டில் இருந்து வருகின்றனர். இவர்களில், ஒரு லட்சத்து, 25 ஆயிரம் பேர் வெளிநாட்டை சேர்ந்தவர்கள். சுற்றுலா, மருத்துவ விஸாவில், இவர்கள் வந்து செல்கின்றனர்.

இவர்களின் வசதிக்காக, இணைய தளம் மூலம் சுற்றுலா விஸா வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, இலங்கை உள்பட, 76 நாடுகளை சேர்ந்தவர்கள், இணையதள விஸா பெற முடியும்.

வெளிநாட்டில் உள்ளவர்கள் இணைய தளம் மூலம் விண்ணப்பித்தால், ஐந்து நாட்களில் பதில் அனுப்பப்படும். பிறகு, திருச்சி விமான நிலையத்துக்கு வந்த பின், விண்ணப்பித்த ரசீதை காட்டினால், 30 நாட்கள் வரை செல்லுபடியாகும் வகையில், உடனடியாக விசா வழங்கப்படும்.

இந்த திட்டம் செயல்பட துவங்கினால், திருச்சிக்கு வரும் வெளிநாட்டு பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.இவ்வாறு, அதிகாரிகள் தெரிவித்தனர்.
Tags:
Privacy and cookie settings