அப்துல் கலாமின் ‘ராமேசுவரம் சோலார் மிஷன்’ கனவை நனவாக்குவோம் என கலாமின் பேரன் ஷேக் சலிம் தெரிவித்தார்.
குடியரசுத் தலைவர் பதவியில் இருந்து அப்துல் கலாம் ஓய்வுபெற்ற பின்னர், தான் பிறந்த ராமேசுவரம் தீவுக்காக ‘ராமேசுவரம் சோலார் மிஷன்’ திட்டத்தை உருவாக்கினார்.
ராமேசுவரம் தீவுக்குத் தேவையான முழுமையான மின்சாரத்தை சூரிய சக்தியில் இருந்து பெறுவதே இத்திட்டத்தின் நோக்கம் ஆகும்.
இதற்காக ராமேசுவரத்தில் உள்ள அவரது வீடான ‘ஹவுஸ் ஆப் கலாம்’, அதில் இயங்கும் ‘மிஷன் ஆப் லைப்’ எனப்படும் அருங்காட்சியத்துக்குத் தேவை யான மின்சாரத்தை சூரிய ஒளியில் இருந்து பெறுவதற்கான பணியை தனது சொந்த செலவில் செய்தார்.
அதைத் தொடர்ந்து மின்சார வசதி இல்லாத தனுஷ்கோடி, முந்தல்முனை, ராமகிருஷ்ணா புரம்,
நடராஜபுரம் உள்ளிட்ட மீனவ கிராமங்களில் 400-க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்களுக்கு சூரிய சக்தி மூலம் மின்சக்தி பெறக் கூடிய உபகரணங்கள் ராமேசுவரம் சோலார் மிஷன் திட்டம் மூலம் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.
மேலும் இந்தியாவில் முதன்முறையாக சூரிய சக்தியில் இயங்கும் மீனவர்களின் நாட்டுப் படகுகளும் பாம்பனில் அறிமுகம் செய்யப்பட்டன.
இதுகுறித்து ராமேசுவரம் சோலார் மிஷன் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளரும் அப்துல் கலாமின் பேரனுமாகிய ஷேக் சலிம் `தி இந்து’விடம் கூறியதாவது:
இருபதுக்கும் மேற்பட்ட மீனவக் கிராமங்களை கொண்டது ராமேசுவரம் தீவு. தீவின் பெரும்பான்மையான மக்களான மீனவர்களின் குடிசைகளில் மின்சார வசதி கிடையாது.
எனவே ராமேசுவரம் தீவு முழுவதும் சூரிய மின் சக்தி மூலம் இயங்க வேண்டும் என்பது தாத்தா கலாமின் கனவாக இருந்தது. தாத்தாவின் வழிகாட்டுதலின் படி ராமேசுவரம் சோலார் மிஷன் திட்டம் உருவாக்கப்பட்டது.
இன்னும் ஒரு ஆண்டு கால அவகாசத்தில் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் ராமேசுவரம் தீவில் உள்ள 22 அரசுப் பள்ளிகளில் 66 கிலோ வாட் சக்தியில் முழுமையான சூரிய மின்சக்தியில் இயங்கக்கூடியதாக அமைப்போம்.
அதைத் தொடர்ந்து பாம்பன் பாலமும், ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலும் சூரிய ஒளியில் இருந்து மின்சக்தியை பெறுவதற் கான பணிகளை தொடங்குவோம்.
இதற்காக எங்களுடன் இன்டர் நேஷனல் வீ சர்வ் பவுண்டேஷன், ரோட்டரி கிளப் ஆகியவை உறுதுணையாக உள்ளன.
தாத்தாவின் கனவுகளை நிறைவேற்றுவதே நாங்கள் அவருக்கு செய்யும் அஞ்சலியாகும் எனத் தெரிவித்தார்.