கலாம் இழப்பை எப்படி தாங்குவேன்? பொன்ராஜ் சோகம்

கலாம் இழப்பை எப்படி தாங்குவேன்? என்று கலாமின் ஆலோசகர் பொன்ராஜ் கண்ணீருடன் கூறினார். 
 
கலாம் மறைவு குறித்து, வி.பொன்ராஜ் செய்தியாளர்களிடம் கூறுகையில், கடந்த, 1995 முதல், கலாமின் ஆலோசகராக இருந்து வருகிறேன். நேற்று முன்தினம் தமிழக நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு, அவருடன் தில்லி சென்றேன். 

ஆகஸ்ட் 3 ஆம் தேதி பெங்களூருவில் நடக்கவிருக்கும் நிகழ்ச்சி ஒன்றில், என்னை பங்கேற்க வேண்டும் என கூறியிருந்தார்; அதற்குள் அவர் மறைந்துவிட்டார். 

இந்த செய்தியை கேட்ட போது, என் மேல் இடி விழுந்ததை போல உணர்ந்தேன். தனிப்பட்ட முறையில் எனக்கும், தமிழக மக்களுக்கும் பெரும் இழப்பு. 

பெங்களூருவில் விஞ்ஞானியாகச் சேர்ந்த என்னை, அவரோடு அழைத்துக் கொண்டார். அவரோடு பணிபுரிந்த அனுபவம் மறக்க முடியாதது. 

இந்தியா வல்லரசாக வேண்டும் என்ற கனவுடன் நாடு முழுவதும் சென்று, இளைஞர்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்படுத்தி, லட்சியங்களை வென்றெடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். இந்தியா, 2020ல் வல்லரசாகும் என்று நம்பிக்கை கொண்டிருந்தார்.

நதிகள் இணைப்பு அவரது கனவு. ஏற்கனவே அவரும் நானும் இணைந்து, 'மேனிபெஸ்டோ பார் சேஞ்ச்' என்ற நுாலை எழுதியுள்ளோம். 

தற்போது அவரும் நானும் இணைந்து, 'புயலை தாண்டினால் தென்றல்' என்ற புத்தகத்தை எழுதி, ஏழு பகுதிகளை முடித்துள்ளோம். அந்த புத்தகத்தை எப்படி முடிப்பது என்பது குறித்தும், ஏற்கனவே சில அறிவுரைகளை வழங்கினார்.

கடந்த, 16 ஆம் தேதி, என்னுடைய பி.எச்டி., குறித்து, இரவு 9:30 மணி முதல், 11:00 மணி வரை என்னோடு பேசிக் கொண்டிருந்தார்.
 
மிகவும் எளிமையாவனர், யாரைப் பற்றியும் குறை கூறாமல் நிறைகளை மட்டுமே பார்க்கும் குணமுடையவர். கலாமின் பேரிழப்பை எப்படி ஈடு செய்வேன்? என்ற பொன்ராஜ் கண்ணீருடன் கூறினார்.
Tags:
Privacy and cookie settings