தூக்கிலிடப்பட்டார் யாகூப் மேமன்!

மும்பை தொடர் குண்டுவெடிப்பு குற்றவாளி யாகூப்  மேமன் இன்று காலை 6.35 மணிக்கு தூக்கிலிடப்பட்டார். 1993 மார்ச் மாதம் 12 ஆம் தேதி மும்பையில் தொடர் குண்டுவெடிப்பு நடத்தப்பட்டது. அந்த குண்டுவெடிப்பில் 257 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டவர் யாகூப் மேமன்.
யாகூப் மேமனின் கடைசி கருணை முறையீட்டு மனுவை  குடியரசுத் தலைவர் நேற்று நிராகரித்தார். கருணை மனு நிராகரிக்கப்பட்டதால், உச்ச நீதிமன்றத்தில் யாகூப் மேமன் தரப்பு வழக்கறிஞர்கள் இடைக்கால தடை கோரி மனு தாக்கல் செய்தனர்.

அதில், ''நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி, அதிகாரிகள், யாகூப்பின் தூக்கு தண்டனையை நிறைவேற்ற குறைந்தபட்சம் 14 நாட்கள் அவகாசம் தரவேண்டுமென்று" கோரி இருந்தனர். இந்த மனு மீதான விசாரணை நேற்று நள்ளிரவு 2 மணி நேரம் நடைபெற்றது.

அப்போது, யாகூப் மேமனின் வழக்கறிஞர் ஆனந்த் குரோவர் முதலில் தனது வாதத்தில், ''கருணை மனு நிராகரிக்கப்பட்டு 14 நாட்களுக்கு பிறகுதான் தண்டனையை நிறைவேற்ற வேண்டும்.

மேமனின் புதிய கருணை மனுவை குறுகிய நேரத்தில் குடியரசு தலைவர் நிராகரித்தது ஏன்?. கருணை மனு நிராகரிப்பு உத்தரவு நகலை பெற யாகூப் மேமனுக்கு உரிமை உள்ளது" என்றார்.

இதை தொடர்ந்து அரசு தரப்பு வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி தனது வாதத்தில், ''யாகூப்பை தூக்கிலிடும் தீர்ப்பு ஏப்ரல் மாதமே எழுதப்பட்டுவிட்டது. ஏகப்பட்ட கருணை மனுக்கள், அமைப்பையே தவறாக்குகிறது.

குடியரசுத் தலைவருக்கு செய்வதற்கு வேறு பல வேலைகள் இருக்கிறது. ஒவ்வொரு நாளும் பிரதிநிதிகள் மனு கொடுத்தால் அமைப்பு எப்படி செயல்படும்?.

மேலும் யாகூப் தரப்பு, சட்ட நடைமுறையை நேர்மையற்ற முறையில் பயன்படுத்துகிறது. தண்டனையை இழுத்தடித்து யாகூப்பை சிறையிலேயே வைக்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறது" என்று குற்றம் சாட்டினார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தடைகோரிய யாகூப் மேமனின் மனுவை நிராகரித்தனர். மேலும், இன்று அதிகாலை 5 மணியளவில் யாக்கூப்பின் தூக்கு தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்தார்.

இதை தொடர்ந்து மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் உள்ள சிறையில், யாகூப் மேமன் இன்று காலை 6.35 மணிக்கு தூக்கிலிடப்பட்டார்.

யாகூப் மேமன் தூக்கிலிடப்படுவதை முன்னிட்டு நாக்பூர் சிறையை சுற்றி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், மும்பையிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மும்பையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து போலீசாரின் விடுமுறையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
Tags:
Privacy and cookie settings