ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு தமிழிசை கண்டனம்!

காமராஜர் விழா கொண்டாட பா.ஜனதாவுக்கு தகுதி இல்லை என்று கூறிய தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு தமிழிசை சவுந்தரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பயிலரங்கம்

தமிழக பா.ஜனதா கட்சியின் தொழில்நுட்ப பிரிவு (ஐ.டி.) சார்பில் சென்னை தியாகராயநகர் பாசுல்லா சாலையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் பள்ளி உள் அரங்கத்தில் சமூக ஊடகங்களின் பயன்பாடு குறித்த பயிலரங்கம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஐ.டி. பிரிவின் மாநில தலைவர் பாலாஜி தலைமை தாங்கினார்.

பயிலரங்கத்தை தமிழக பா.ஜனதா கட்சியின் தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். சிறப்பு விருந்தினராக பா.ஜனதா கட்சியின் தமிழக பொறுப்பாளர் முரளிதரராவ் கலந்து கொண்டு பேசினார்.

ஆயுதம் தாங்கிய போர்

அப்போது அவர் கூறியதாவது:-

அடுத்து வர உள்ள தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு சமூக வலைத்தளம் என்ற ஆயுதத்தை தாங்கி எங்களுடைய போரை நாங்கள் தொடங்கியுள்ளோம். இளைஞர்களையும், தொழில்நுட்பத்தையும் ஒன்றாக இணைக்க உள்ளோம்.

அனைத்துவிதமான வளங்களையும் பயன்படுத்தி கட்சியை தயார்படுத்தி வருகிறோம். கட்சியின் உறுப்பினர்கள் எண்ணிக்கை 4 மடங்காக உயர்ந்து 45 லட்சமாக உள்ளது.

தமிழகத்தில் வேலைவாய்ப்பு இழப்பு, ஊழல், தொழிற்சாலைகள் மூடல் உள்ளிட்ட அ.தி.மு.க.வின் மோசமான ஆட்சி குறித்து கிராமங்கள் வாரியாக மற்றும் அதிகாரம் மறுக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

தேர்தல் அறிக்கை

ஒவ்வொரு தொகுதிக்கும் ஏற்றவாறு தேர்தல் அறிக்கைகள் தயாரிக்கப்படும். தேசிய ஜனநாயக கூட்டணியில் தமிழகத்தில் உள்ள கட்சிகள் இன்னும் அங்கம் வகித்து வருகின்றன. மேலும் கட்சிகள் வந்து சேரும் என்று எதிர்பார்க்கிறோம். முதல்-அமைச்சர் வேட்பாளர்களை அறிவிப்பது அந்தந்த கட்சிகளின் உரிமை.

வெற்றிப்பெற்ற பின்னர்தான் முதல்-அமைச்சர் யார்? என்பது குறித்து முடிவு செய்யப்படும். தமிழக சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதே எங்களுடைய இலக்கு. இதற்காக நாங்கள் எங்களுடைய பணியை தீவிரப்படுத்தியுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

கண்டனம்

இதனைத்தொடர்ந்து டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறுகையில், “தமிழக சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதாவின் வெற்றிக்கு ஐ.டி. பிரிவு தொண்டர்கள் முக்கிய பங்காற்றுவார்கள்.

பா.ஜனதா அரசின் சாதனைகளையும், அரசு கொண்டு வந்த திட்டங்களின் பயன்களையும் மக்களிடம் எடுத்துக் கூறுவார்கள். சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைப்போம் என்று நாங்கள் ஒரு போதும் கூறவில்லை.

அதற்கான தளங்கள் இன்னும் உருவாகவில்லை. காமராஜர் விழாவினை கொண்டாட பா.ஜனதாவிற்கு தகுதி கிடையாது என்று ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியதற்கு நான் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன்.

காமராஜரை பா.ஜனதா துதிக்கும்

நாட்டிற்கு உழைத்தவர்கள், நல்லாட்சி தந்தவர்களை பா.ஜனதா மதிக்கும், துதிக்கும். அந்த வகையில் பா.ஜனதா காமராஜரை துதிக்கிறது. கார்த்தி ப.சிதம்பரம் காமராஜர் பெயரை பயன்படுத்தினால் வெற்றிப்பெறமுடியாது என்று கூறியிருந்தார்.

இதையெல்லாம் வைத்து பார்க்கும்போது காங்கிரசார்தான் காமராஜர் பெயரை உச்சரிக்க உரிமை இல்லை” என்றார்.

சமூக ஊடக பயிலரங்கத்தில் பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா, முன்னாள் தமிழக பா.ஜனதா கட்சி தலைவர் லட்சுமணன், மாநில துணைத்தலைவர் சக்கரவர்த்தி, அமைப்பு பொதுச்செயலாளர் கோவிந்தராஜூலு உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Tags:
Privacy and cookie settings