பெங்களூருவைச் சேர்ந்த ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் லிமிடெட் நிறுவனம் ஸ்விட்சர்லாந்தில் உள்ள தங்கம் சுத்திகரிப்பு ஆலையை 40 கோடி டாலருக்கு வாங்கியுள்ளது.
வால்காம்பி எனப்படும் இந்த சுத்திகரிப்பு ஆலையை இந்திய மதிப்பில் ரூ. 2,569 கோடிக்கு வாங்கியுள்ளதாக நிறுவனத்தின் தலைவர் ராஜேஷ் மேத்தா தெரிவித்துள்ளார்.
ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமாக சிங்கப்பூரில் செயல்படும் நிறுவனம் மூலம் 70 சதவீத தொகையும், 30 சதவீதம் கடன் மூலமும் திரட்டப்பட்டதாக அவர் கூறினார்.
உலகிலேயே மிகப் பெரிய தங்கம் சுத்திகரிப்பு ஆலையாக கடந்த 50 ஆண்டுகளாகச் செயல்படும் வால்காம்பி ஆலை கடந்த 3 ஆண்டுகளில் 945 டன் தங்கம்,
325 டன் வெள்ளியை சுத்திகரித்து விற்பனை செய்துள்ளதாக அவர் மேலும் கூறினார். கடந்த ஆண்டு இந்த ஆலையின் வருமானம் 3,800 கோடி டாலராகும்.
இந்த ஆலையைக் கையகப்படுத்தியதன் மூலம் தங்கள் நிறுவனம் இந்தியாவில் அதிக அளவில் தங்கம் சுத்திகரிக்கும் நிறுவனமாக உயர்ந்துள்ளது. பெங்களூரில் உள்ள ஆலை ஆண்டுக்கு 1,255 டன் தங்கத்தை சுத்திகரிக்கும் திறன் கொண்டது.
ஸ்விஸ் நிறுவனத்தைக் கையகப்படுத்தியதன் மூலம் தங்கள் நிறுவனத்தின் சுத்திகரிப்பு திறன் ஆண்டுக்கு 2,200 கோடியாக உயர்ந்துள்ளதாக மேத்தா தெரிவித்தார்.
முற்றிலும் கடன் இல்லாத நிறுவனமாக வால்காம்பி திகழ்கிறது. இந்நிறுவன நிதி நிலை அறிக்கையில் போதுமான அளவுக்கு கையிருப்பில் ரொக்கம் வைத்துள்ளது இந்நிறுவனம்.
நியூமோன்ட் நிறுவனம் உலகின் மிகப் பெரிய தங்கம் மற்றும் தாமிரம் சுத்திகரிக்கும் நிறுவனமாகும். இதன் அங்கமாக வால்காம்பி செயல்பட்டு வந்தது. ஸ்டாண்டர்ட் அண்ட் பூர் தரச்சான்று நிறுவன குறியீட்டில் இடம்பெற்றுள்ள 500 நிறுவனங்களில் ஒன்றாகும்.
வால்காம்பி ஆலையை கைய கப்படுத்தியதன் மூலம் தங்கத்தை அதிகம் நுகரும் நாடாகத் திகழும் இந்தியாவின் தேவை மற்றும் இந்தியாவைச் சுற்றியுள்ள அண்டை நாடுகளின் தேவையை இதன் மூலம் பூர்த்தி செய்ய இயலும் என்று ராஜேஷ் மேத்தா தெரிவித்தார்.