விடை பெற்றார் கலாம் !

லட்சக்கணக்கான பொதுமக்களின் கண்ணீருடன் விடை பெற்றார் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம். மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் உடல் இன்று ராமேஸ்வரத்தில் பேக்கரும்பு என்ற இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
பள்ளிவாசலில் நடந்த சிறப்பு தாெழுகைக்கு பின்னர், கலாமின் உடல் இறுதி ஊர்வலமாக ராணுவ வாகனத்தில் புறப்பட்டு, வழிநெடுக லட்சக்கணக்கான பொதுமக்கள் கண்ணீருடன் சென்றது.

பள்ளிவாசல் வந்தது கலாம் உடல்...

நேற்று இரவு முழுவதும் கலாம் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடல், சிறப்பு பிரார்த்தனைகளுக்கு பின் அவரது வீட்டின் அருகில் உள்ள முகைதீன் ஆண்டவர் தொழுகை பள்ளிவாசலுக்கு இன்று காலை கொண்டு செல்லப்பட்டது. அங்கு, சிறப்பு தொழுகை நடைபெற்றது

கலாமின் இறுதி ஊர்வலம் புறப்பட்டது...

அங்கு தொழுகை முடிந்தபின் மீண்டும் ராணுவ வீரர்களிடம் கலாமின் உடல் ஒப்படைக்கப்பட்டு, அலங்கரிக்கப்பட்ட ராணுவ வாகனத்தின் மூலம்,

ராமேஸ்வரத்தில் இருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ள பேக்கரும்பு என்ற இடத்தில் அமைக்கப்பட்டுள்ள அடக்கத்தளத்திற்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. இந்த வாகனம், ராம தீர்த்தம் தெற்கு, நகர் காவல் நிலையம், பேருந்து நிலையம் வழியாக அடக்கத்தளத்திற்கு சென்றது.

மோடி, ராகுல் மதுரை வருகை...

அப்துல் கலாமுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் டெல்லியில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்து, அங்கிருந்து ராமேஸ்வரம் சென்றனர்.

பேக்கரும்பில் உடலுக்கு ராணுவ மரியாதை...
ராமேஸ்வரத்தில் இருந்து அடக்கம் செய்யப்பட உள்ள பேக்கரும்புக்கு அப்துல் கலாமின் உடல், ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. அதன்பின் அங்கு அவரது உடலுக்கு ராணுவ மரியாதை செலுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.
21 குண்டுகள் முழங்க விடை பெற்றார் கலாம்...

தலைவர்களின் இறுதி அஞ்சலியை தொடர்ந்து, ராணுவ வீரர்களின் 21 குண்டுகள் முழங்க நம்மை விட்டு பிரிந்து சென்றார் இளைஞர்களின் கனவு நாயகன்.
கலாமின் உடலை கடைசி முறையாக பார்ப்பதற்காக நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான மக்கள் ராமேஸ்வரத்திற்கு சோகத்துடனும், கண்ணீருடனும் வந்திருந்தனர்.

முன்னதாக...

கோடிக்கணக்கான இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் மக்களின் இதயங்களை கொள்ளை கொண்ட அப்துல் கலாம், கடந்த திங்கட்கிழமை மாலை மேகாலயா தலைநகர் ஷில்லாங்கில் மாணவர்களிடையே உரையாற்றி கொண்டிருந்தபோது மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

அவரது உடல், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் செவ்வாய்கிழமை காலை அசாம் தலைநகர் கவுகாத்தி கொண்டு வரப்பட்டு, பின்னர் அங்கிருந்து விமானப்படை விமானத்தில் டெல்லி கொண்டு செல்லப்பட்டது.

டெல்லி பாலம் விமான நிலையத்தில் அப்துல் கலாமின் உடலுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி, பிரதமர் மோடி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் உள்ளிட்டவர்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.

அதன்பிறகு அப்துல் கலாமின் உடல் டெல்லி ராஜாஜி மார்க்கில் உள்ள அவரது இல்லத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.
இந்நிலையில், அப்துல் கலாமின் இறுதிச்சடங்கை அவரது சொந்த ஊரான ராமேஸ்வரத்தில் நடத்த அவரது சகோதரர் மற்றும் குடும்பத்தினர், உறவினர்கள் விருப்பம் தெரிவித்தனர். அதை மத்திய அரசு ஏற்றுக் கொண்டது.

இதைத்தொடர்ந்து, அப்துல் கலாமின் உடல் நேற்று காலை டெல்லியில் இருந்து சி-130 ஜே சூப்பர் ஹெர்குலிஸ் ராணுவ விமானம் மூலம் மதுரை கொண்டு வரப்பட்டு,  அங்கிருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் மண்டபம் கடற்படை முகாமிற்கு கொண்டு வரப்பட்டது.
அதன்பின், அங்கிருந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கடற்படைக்கு சொந்தமான வாகனத்தில், கலாம் உடல் ராமேஸ்வரத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

அப்போது மண்டபம் முதல் ராமேசுவரம் வரை கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல், தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் மாணவர்கள், இளைஞர்கள் என பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு நின்று அப்துல் கலாமின் உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள்.
இதை தொடர்ந்து, ராமேஸ்வரம் பேருந்து நிலையம் அருகே உள்ள மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் கலாமின் உடல் வைக்கப்பட்டு, அரசியல் கட்சி தலைவர்கள், பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.

கலாம் உடலுக்கு அஞ்சலி செலுத்த 3 கிலோ மீட்டர் தூரம் பொதுமக்கள் நீண்ட வரிசையில் சோகத்துடனும், கண்ணீருடனும் காத்திருந்தனர்.

உறவினர்களிடம் உடல் ஒப்படைப்பு...

பொதுமக்கள் அஞ்சலி செலுத்திய பின் இரவில் அப்துல் கலாமின் உடல், அவருடைய உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. கலாமின் வீட்டினுள் அவரது உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் மற்றும் அப்பகுதியை சேர்ந்த இஸ்லாமியர்கள் கலாமின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
Tags:
Privacy and cookie settings