லக்வி, தாவூத் ஆகியோரை மோடி இந்தியாவிற்கு திரும்பி கொண்டு வருவார்.. தொகாடியா

மும்பை தாக்குதலில் முக்கிய குற்றவாளியான ஜகியூர் ரஹ்மான் லக்வியை பாகிஸ்தான் நாட்டில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவிற்கு திரும்ப கொண்டு வருவார் என விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் (வி.எச்.பி.) தலைவர் பிரவீண் தொகாடியா இன்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
குஜராத்தில் வி.எச்.பி. அமைப்பின் மாநில செயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த தொகாடியாவிடம், அடுத்த வருடம் பாகிஸ்தானுக்கு மோடி செல்வது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில்,

லக்வி மற்றும் தாவூத் (இப்ராகிம்) ஆகியோரை இந்தியாவிற்கு மோடி திரும்ப கொண்டு வருவார் என நாங்கள் நம்புகிறோம்.  அவர்களின் குற்றங்களுக்காக அவர்களை தூக்கிலிட்டு மற்றவர்களுக்கு பாடம் புகட்டுவார் என்று தொகாடியா கூறியுள்ளார்.

ராமர் கோவில் கட்டுவது குறித்து பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் அமித் ஷா கூறியிருந்த முந்தைய அறிக்கை மற்றும் மக்களவையில் 3ல் 2 பங்கு பெரும்பான்மை பாரதீய ஜனதா கட்சிக்கு தேவைப்படுகிறது என்ற கருத்து ஆகியவை குறித்து கேட்கப்பட்டதற்கு,

ராமர் கோவிலை கட்டுவதற்கு சாதாரண பெரும்பான்மை தேவைப்படுகிறது.  அந்த போதிய பெரும்பான்மையை பாரதீய ஜனதா கட்சி தற்பொழுது பெற்றிருக்கிறது என்றும் கூறியுள்ளார்.

வி.எச்.பி.யின் லவ் ஜிகாத் பிரசாரம் குறித்து கூறிய அவர், ஆகஸ்டில் இந்த விவகாரம் குறித்து மாநில அளவில் அவர்கள் செயற்திட்டம் ஒன்றை தொடங்குவார்கள் என்று கூறியுள்ளார்.  விவசாயிகளுக்கு இரு திட்டங்கள் தொடங்கப்படும் என்றும் தொகாடியா அறிவித்துள்ளார்.  அவர் கூறும்போது, அதிக கடனால் விவசாயிகள் நசுக்கப்பட்டுள்ளனர்.
எனவே, அவர்களுக்காக ஒரு திட்டத்தை தொடங்க நாங்கள் முடிவு செய்துள்ளோம்.  அதன்படி, அதிக செலவுகளின்றி விவசாயம் செய்வது எப்படி என்பது குறித்து அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என கூறியுள்ளார்.  அவர், மற்றொரு திட்டம் செப்டம்பரில் மாநிலத்தில் தொடங்கப்படும்.

அதன்படி, மாதம் ஒன்றிற்கு ஆயிரம் ரூபாய்க்கும் கீழ் வருமானம் ஈட்டுவோர் மற்றும் போதிய மருத்துவ வசதிகளை பெற முடியாதவர்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்படும் என கூறியுள்ளார்.
Tags:
Privacy and cookie settings