ஓடும் ரயிலில் இருந்து தள்ளி விளையாட்டு வீரர் கொலை?

வாள்வீச்சு போட்டி யில் தேசிய அளவில் பதக்கம் பெற்ற வீரரை, ஓடும் ரயிலில் இருந்து, ரயில்வே போலீசார் தள்ளி விட்டதில், அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
உ.பி., மாநிலத்தை சேர்ந்தவர் ஹோசியார் சிங். வாள்வீச்சு போட்டிகளில் தேசிய அளவில் பதக்கங்களை குவித்தவர். இவர், நேற்று முன்தினம், மதுராவிலிருந்து, தன் சொந்த ஊரான காஸ்கான்ச்சிற்கு ரயிலில், தன் குடும்பத்துடன் வந்து கொண்டிருந்தார்.

ரயிலில், பெண்களுக்கான பெட்டியில், தன் தாயார், மனைவி, குழந்தை ஆகியோரை ஏற்றிவிட்ட ஹோசியார், தான் மட்டும் பொது பெட்டியில் பயணித்தார். ஒரு ரயில்வே ஸ்டேஷனில் ரயில் நின்ற போது, பொதுப் பெட்டியில் இருந்து இறங்கிய ஹோசியார், பெண்களுக்கான பெட்டியில் பயணம் செய்த, தன் மனைவியை பார்க்க சென்றார்.

அப்போது, அங்கு வந்த சில ரயில்வே போலீசார், பெண்களுக்கான பெட்டியில் ஏறியதற்காக, 200 ரூபாய் தரும்படியும், இல்லையெனில், பெட்டியில் இருந்து இறங்கும்படியும் கூறினர். இதை ஏற்க மறுத்த ஹோசியார், போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதற்கிடையே, ரயில் புறப்பட்டது. இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் முற்றி, கைகலப்பு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த போலீசார், ஹோசியாரை ரயிலில் இருந்து கீழே தள்ளியதாகவும், அதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்ததாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து, ஹோசியாரின் மனைவி கூறியதாவது:எனக்கு உடல் நலம் சரியில்லை. இதனால், பொதுப் பெட்டியில் இருந்து இறங்கி, என்னை பார்ப்பதற்காக, என் கணவர் வந்தார்.

இதற்கு பணம் கேட்ட போலீசார், என் கணவரை தொந்தரவு செய்தனர். தர மறுத்ததால், அவரை ரயிலில் இருந்து கீழே தள்ளி கொலை செய்து விட்டனர். இந்த வழக்கை கொலை வழக்காக மாற்ற வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:ரயில்வே போலீசார், ஹோசியாரை கீழே தள்ளி விட்டதாக கூறுவது தவறு. ரயில் நின்றதும் தண்ணீர் பிடிப்பதற்காக கீழே இறங்கியுள்ளார் ஹோசியார்.

தண்ணீர் பிடிப்பதற்குள் ரயில் புறப்பட்டு விட்டது. வேகமாக ஓடிச் சென்று ரயில் ஏற முயற்சித்தபோது, கீழே விழுந்து இறந்து விட்டார். இவ்வாறு, போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
Tags:
Privacy and cookie settings