சினிமா பட அதிபர் இப்ராகிம் ராவுத்தர் உடல் பள்ளி வாசலில் அடக்கம்

சினிமா பட அதிபர் இப்ராகிம் ராவுத்தர், சென்னையில் நேற்று மரணம் அடைந்தார்.   இப்ராகிம் ராவுத்தர் உடல்  பகல் 12 மணிக்கு ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு சாலி கிராமத்தில் உள்ள பள்ளி வாசலில் அடக்கம் செய்யப்பட்டது.
உழவன் மகன், புலன் விசாரணை, கேப்டன் பிரபாகரன், பூந்தோட்ட காவல்காரன், கருப்பு நிலா' உள்பட பல படங்களை தயாரித்தவர், இப்ராகிம் ராவுத்தர். இவர், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் நெருங்கிய நண்பர் ஆவார். இவருக்கு இருதய நோய் இருந்து வந்தது. இதற்காக, ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.நேற்று உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார்.

அவரது உடல் வடபழனி நூறடி சாலையில் உள்ள ராவுத்தர் பிலிம்ஸ் அலுவலத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருந்தது. திரையுலகினர் நேரில் அஞ்சலி செலுத்தினார்கள்.

அவருடைய உடலுக்கு தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். அப்போது அவர் கண்கலங்கி அழுதார். விஜயகாந்துடன் அவருடைய மனைவி பிரேமலதா, மைத்துனர் சுதீஷ், மகன்கள் பிரபாகரன், சண்முக பாண்டியன், தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் பார்த்தசாரதி, நல்லதம்பி ஆகியோரும் வந்திருந்து அஞ்சலி செலுத்தினார்கள்.

நடிகர்கள் சத்யராஜ், ராதா ரவி, அருண்பாண்டியன் எம்.எல்.ஏ, டைரக்டர்கள் சங்க தலைவர் விக்ரமன், செயலாளர் ஆர்.கே.செல்வமணி, டைரக்டர்கள் பேரரசு, லியாகத் அலிகான், ரமேஷ், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் 'கலைப்புலி' எஸ்.தாணு, செயலாளர் டி.சிவா, துணைத்தலைவர்கள் பி.எல்.தேனப்பன், கதிரேசன்,

பட அதிபர்கள் கே.எஸ்.சீனிவாசன், காஜா மைதீன், எச்.முரளி, சித்ரா லட்சுமணன், விஜயகுமார், தங்கராஜ், சுப்பையா, தென்சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் கராத்தே தியாகராஜன், மற்றும் ஏராளமான திரையுலக பிரமுகர்களும் அஞ்சலி செலுத்தினார்கள்.

பகல் 12 மணி அளவில் இப்ராகிம் ராவுத்தர் உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு சாலி கிராமத்தில் உள்ள பள்ளி வாசலில் அடக்கம் செய்யப்பட்டது.

மொத்தம் 36 படங்களை அவர் தயாரித்து இருந்தார். 2000-ல் இருந்து 2002-ம் ஆண்டு வரை, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவராக இருந்தார். பின்னர், அ.தி.மு.க.வில் இணைந்தார். அவர் கடைசியாக தயாரித்த படம், 'புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:
Privacy and cookie settings