எங்கெங்கு காணினும் கலாம்.. சமூக வலைதளங்களில் கலாமுக்கு குவியும் அஞ்சலி!

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமிற்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் பேஸ்புக், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் மக்கள், கலாமின் புகைப்படத்தை புரொபைல் பிக்சராக வைத்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

 


உலகம் முழுவதும் வாழும் இந்தியர்களால் ‘மக்களின் ஜனாதிபதி' எனப் போற்றப் படுபவர் மறைந்த அப்துல் கலாம்.

ஏவுகணை நாயகனாக வலம் வந்த அப்துல்கலாம், தனது தன்னம்பிக்கை பேச்சு மற்றும் எழுத்தால் மக்கள் மனதில் அசைக்க முடியாத இடத்தைப் பிடித்துள்ளார். இளைஞர்களைக் கனவுக் காணுங்கள் என ஊக்கப் படுத்தியவர் அவர்.

குடியரசுத் தலைவர் பதவியை விட ஆசிரியர் பணியே தனது மகிழ்ச்சி என மாணவர்களைச் சுற்றியே தனது வாழ்க்கையை வாழ நினைத்தார். அவரது கடைசி பேச்சும் கூட அவரது ஆசைப்படியே மாணவர்கள் மத்தியிலேயே அமைந்தது.

கண்ணீர் கடலில் மக்கள்... 

அப்துல்கலாமின் இந்த திடீர் இழப்பை ஏற்றுக் கொள்ள முடியாமல் மக்கள் தவிக்கிறார்கள் என்பது அவர்களது நடவடிக்கைகள் மூலமே தெரிகிறது. பேஸ்புக், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளப் பக்கங்களில் பலர் கலாம் புகைப்படத்தையே புரொபைல் பிக்சராக வைத்துள்ளனர்.

புரொபைல் பிக்சராக... 

புரொபைல் பிக்சரைப் போலவே பேஸ்புக்கில் சிலர் கவர் போட்டோவாக கலாம் போட்டோவை வைத்துள்ளனர். இன்னும் சிலர் தங்களது இரங்கலைத் தெரிவிக்கும் வகையில், கருப்பு நிறத்தை புரொபைல் பிக்சராக வைத்துள்ளனர்.



புகைப்படங்கள்... 

இதேபோல், மாலை போடப்பட்ட கலாம் புகைப்படம் உட்பட அவரது பல புகைப்படங்களை நெட்டிசன்கள் பதிவு செய்து தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

இரங்கல் கவிதை 

சிலர் ‘கனவு காணச் சொன்னாயே, இது கனவாகவே போய் விடக் கூடாதா?' என்றும், ‘எங்களைக் கனவு காணச் சொல்லிவிட்டு நீ எங்கே போனாய்?' என தங்களது வேதனைகளை வார்த்தைகளாகக் கொட்டி வருகின்றனர்.

இந்தியர்களைக் கதற வைத்த மரணம்... 

இப்படியும் ஒருவர் பதிவு செய்துள்ளார். அதாவது, ‘விண்ணில் கலந்த கலாம்... நீ மண்ணில் இருந்து செலுத்திய ராக்கெட்டுகளை பார்வையிட தற்போது விண்ணுலகில் கலந்து விட்டாயோ...

இத்தனை இந்திய இதயங்களை கதற வைத்ததில்லை எந்த மரணமும் உன் மரணத்தைப் போல...' எனக் குறிப்பிட்டுள்ளார்.

இறைவன் அழைத்துக் கொண்டான்... 

அப்துல் கலாமே தனது மறைவால் வாடும் இளைய சமுதாயத்திற்கு ஆறுதல் கூறுவது போல ஒரு புகைப்படமும் வாட்ஸ் அப்பில் உலா வருகிறது. அதில், ‘மாணவர்களே, இளைஞர்களே விடை பெறுகிறேன்..

நாட்டை முன்னேற்ற பாதையில் அழைத்துச் செல்வது உங்கள் கடமை... இறைவன் அழைத்துக் கொண்டான்' என அப்துல் கலாமே கூறுவது போல் வரிகள் எழுதப் பட்டுள்ளது.
Tags:
Privacy and cookie settings