லாலு, நிதிஷ் கூட்டணியை குறைத்து மதிப்பிட கூடாது.. சத்ருகன் சின்கா

பீகாரில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில் அங்கு அரசியல் கட்சிகள் இடையே வெற்றிக்கான உஷ்ணம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஒரு புறம் நிதிஷ் தலைமையிலான ஜனதா பரிவார், 
 மறுபுறம் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பீகாரின் தேர்தல் களத்தை விறுவிறுப்பாக்கி வருகின்றன. இந்த சூழலில் பாஜ வியூகத்தை உடைக்க லாலு நிதிஷ் கூட்டணி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ளது. 

மதசார்பற்ற கூட்டணி என்று அறிவித்துக் கொண்டுள்ள அவர்கள் பாஜவை வீழ்த்த வியூகம் வகுத்து வருகின்றனர். அதே நேரத்தில் பிரதமர் மோடியின் பிரசாரத்தில் நம்பிக்கை வைத்து நிதிஷ் அதிருப்தியாளர்கள் உள்ளிட்டோரை தங்கள் வசம் ஈர்ப்பதன் மூலம் 

வெற்றி பெற்று விடலாம் என பாஜ கனவு காணுகிறது. இதனால் இரு தரப்பினரும் இப்போதே பரஸ்பரம் விமர்சனங்களை அள்ளி வீசத் தொடங்கியுள்ளனர்.

சட்டமன்ற மேலவை தேர்தலில் மொத்தமுள்ள 24 இடங்களில் பாஜ 12 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. சுயேட்சை எம்எல்ஏவின் ஆதரவால் கூடுதலாக ஒரு இடத்தை பாஜ கைப்பற்றியது.

நிதிஷ் கூட்டணிக்கு 10 இடங்கள் கிடைத்துள்ளன. மற்றொரு இடத்தை லாலுவின் ஆர்ஜேடியுடன் நெருக்கமான சுயேட்சை கைப்பற்றினார்.

இந்த சூழலில் பாஜ எம்பியும் பிரபல இந்தி நடிகருமான சத்ருகன் சின்கா நிருபர்களிடம் கூறுகையில், தற்போது கிடைத்துள்ள வெற்றியை பெரிதாக கருத முடியாது. இதை வைத்துக் கொண்டு லாலு நிதிஷ் கூட்டணியை குறைத்து மதிப்பிட முடியாது. 

அவர்கள் இருவருக்கும் பீகாரில் உள்ள பெரும்பான்மையான சமூகங்களின் ஆதரவு உள்ளது. எனவே வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் அவர்களின் கூட்டணியை முறியடித்து வாக்குகளை பெறுவதற்கு பாஜ கடுமையான வியூகங்களை வகுக்க வேண்டியிருக்கும்.

மேலவை தேர்தலை பொது தேர்தல் போல கருத முடியாது. உண்மையைச் சொல்லப் போனால் பாஜ இனிமேல் தான் மிகவும் கவனமாக வேலை செய்ய வேண்டும் என்று எச்சரித்துள்ளார்.

ஆனால் மாநில பாஜ தலைவர் சுஷில்குமார் மோடி கூறுகையில், மேலவை தேர்தல் மக்களின் எண்ணத்தை பிரதிபலிக்கிறது என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:
Privacy and cookie settings