திருச்சி கலையரங்கம் தியேட்டருக்கு "சீல்' குத்தகைதாரர் உடைத்ததால் அதிகாரிகள் அதிர்ச்சி!

திரைப்படம் திரையிடுவதற்கான உரிமத்தை புதுப்பிக்காததால், திருச்சி கலையரங்கம் சினிமா தியேட்டருக்கு, ஆர்.டி.ஓ., நேற்று காலை, "சீல்' வைத்தார். அதிகாரிகள் வைத்த சீலை, தியேட்டர் நிர்வாகத்தினர், உடைத்து விட்டு, மதியம் சினிமா படம் திரையிட்டனர். 

 

இதனால் அதிர்ச்சியடைந்த அதிகாரிகள், நேற்று மாலை மீண்டும் தியேட்டருக்கு, "சீல்' வைத்தனர். திருச்சி, மத்திய பஸ் ஸ்டாண்ட் அருகே, தியாகராஜ பாகவதர் மன்றம் என்ற கலையரங்கம் சினிமா தியேட்டர் உள்ளது. 

அரசுக்கு சொந்தமான இந்த தியேட்டர், ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை குத்தகைக்கு விடப்படும். தற்போது, இந்த தியேட்டரை கஸ்தூரி என்பவர், குத்தகை எடுத்து, நடத்தி வருகிறார். சூர்யா நடித்த, "மாஸு' திரைப்படம், இங்கு திரையிடப்பட்டுள்ளது. 

இந்நிலையில், நேற்று காலை, 8.30 மணிக்கு, திருச்சி, ஆர்.டி.ஓ., கணேசசேகரன் தலைமையில் சென்ற வருவாய்துறை அதிகாரிகள், படம் திரையிடுவதற்கான, "சி' படிவம் உரிமத்தை புதுப்பிக்காததால் தியேட்டருக்கு, "சீல்' வைத்தனர்.

காலை காட்சியை காண வந்த ரசிகர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். தியேட்டருக்கு, சீல் வைக்கப்பட்ட சம்பவத்தை அடுத்து, தியேட்டர் நிர்வாகம் சார்பில், அதிகாரிகளிடம் பேசியதாக கூறப்படுகிறது. இதில், எந்த தீர்வும் ஏற்படவில்லை.


இந்நிலையில், தியேட்டர் நிர்வாகத்தினர், அதிகாரிகள் வைத்த, சீலை உடைத்து எடுத்து விட்டு, மதியம், 2.30 மணி காட்சியை திரையிட்டனர். 


இந்த தகவல் கிடைத்ததும் அதிர்ச்சி அடைந்த, ஆர்.டி.ஓ., கணேசசேகரன், தாசில்தார் ரவி ஆகியோர் தியேட்டருக்கு வந்தனர். மீண்டும் மாலை, 5.15 மணிக்கு தியேட்டருக்கு, "சீல்' வைத்தனர்.

காலையில் வைத்த சீலை, தியேட்டர் நிர்வாகத்தினர் உடைத்தது குறித்து, வருவாய்துறை சார்பில் போலீஸ் கமிஷனரிடம் புகார் செய்யப்பட்டது.


கூடுதல் போலீஸ் துணை கமிஷனர் பாலகிருஷ்ணன், தலைமையில், 50க்கும் மேற்பட்ட போலீஸார், பாதுகாப்புக்காக நேற்று மாலை தியேட்டரில் குவிக்கப்பட்டனர். இதனால், அப்பகுதியில் பெரும் பதட்டமான சூழல் ஏற்பட்டது.


இது குறித்து ஆர்.டி.ஓ., கணேசசேகரன் கூறியதாவது:


தியேட்டர் நடத்துவதற்கு ஆண்டுக்கு ஒருமுறை, "சி' ஃபார்ம் விண்ணப்பத்தை, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் புதுப்பிக்க வேண்டும். இந்த உரிமம் புதுப்பிக்காமலேயே தியேட்டரில் படம் திரையிட்டு வந்தனர். பலமுறை கூறியும் குத்தகைதாரர் உரிமத்தை புதுப்பிக்கவில்லை. 

இதனால், தியேட்டருக்கு இன்று (நேற்று) காலை, சீல் வைத்தோம். ஆனால், சீலை உடைத்து விட்டு படத்தை திரையிட்டுள்ளனர். இது குறித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. உரிமம் புதுப்பித்தால் தான் படம் திரையிட முடியும்.

இவ்வாறு, அவர் கூறினார்.


ஏற்கனவே கடந்த ஏப்ரல், 18ம் தேதி, இதே போல் சீல் வைக்கப்பட்டு, பின் நீதிமன்ற அனுமதி பெற்று, படம் திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Tags:
Privacy and cookie settings