ரம்ஜான் பண்டிகையை ஒட்டி அரசியல் தலைவர்கள் வாழ்த்து !

ரம்ஜான் பண்டிகையை ஒட்டி இஸ்லாமிய பெருமக்களுக்கு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ள வாழ்த்து செய்தியில், ஈகை, கருணை, அன்பு, மனித நேயத்தை இறைத்தூதர் நபிகள் நாயகம் போதித்தார்.
 
நபிகள் போதனையை கடைபிடித்து அமைதி, சமாதானம் தழைத்திட உறுதி ஏற்போம் என்று தெரிவித்துள்ளார். திமுக தலைவர் கருணாநிதி, இஸ்லாமியர்களுக்காக திமுக ஆட்சியில் கொண்டுவந்த திட்டத்தை பட்டியலிட்டு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

1969-ம் ஆண்டு மிலாது நபிக்கு முதன் முதல் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டது. 2001-ம் ஆண்டு அதிமுக அரசு ரத்து செய்த மிலாதுநபி விடுமுறை மீண்டும் 2006-ம் ஆண்டு அமல்படுத்தப்பட்டது.

1973-ம் ஆண்டு உருது பேசும் முஸ்லிம்கள் பிற்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டனர், என்றும், சென்னையில் உள்ள அரசு மகளிர் கல்லூரிக்கு 1974-ம் ஆண்டு காயிதே மில்லத் என்று பெயர் சூட்டப்பட்டது என்றும் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, உலகமெல்லாம் வாழ்கின்ற இஸ்லாமியப் பெருமக்கள், மாதங்களில் உன்னதமான ரமலான் மாதத்தில் 30 நாள்களும் மேற்கொள்கின்ற தவத்தின் நிறைவு நாள் ஈகைத் திருநாளாம் ரமலான் ஈது பெருநாள் ஆகும்.

அனைத்து சமயத்தினரும் ஒருவருக்கொருவர் இணக்கமாக பரிவுடன் சகோதரத்துவத்தை வளர்ப்பது தான் இந்திய நாட்டின் ஜனநாயத்தைக் காக்கும் அரண் ஆக அமையும். இந்நிலையில், சமய நல்லிணக்கத்தைக் கட்டிக் காக்க அனைவரும் உறுதி கொள்வோம் என்று தெரிவித்துள்ளார்.

தமிழக கவர்னர் ரோசையா தெரிவித்துள்ள வாழ்த்து செய்தியில், இந்த மகிழ்ச்சியான ரம்ஜான் பெருநாளில் இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயம் நிறைந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

நோன்பு நிறைவு பெறும் நன்நாளில் முகமது நபி போதித்த சமத்துவம், சுய கட்டுப்பாடு, நல்லொழுக்கம், அன்பு, பரிமாற்றம், ஒற்றுமை, சமாதானம் ஆகியவற்றை கடைபிடிப்போம் என்று தெரிவித்துள்ளார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள வாழ்த்தில்,

இயன்றதைச் செய்வோம் இல்லாதவர்கே, என்ற அடிப்படையில் ஏழை, எளியவர்கள் மீது பரிவுகாட்டி, உண்ண உணவளித்து, உடுக்க உடைகொடுத்து, தானதர்மங்கள் செய்து, முப்பது நாட்கள் புனிதநோன்பினை முடித்துக்கொண்டு ரம்ஜான் திருநாளைக் கொண்டாடும் இந்த இனிய நாளில்,

அன்பு ஓங்கிட, அறம் தழைத்திட, சமாதானம் நிலவிட, சகோதரத்துவம் வளர்ந்திட வேண்டுமென இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த ரம்ஜான் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

 பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், அண்ணல் நபி அருளிய போதனைகளில் முதன்மையானது மது அருந்தாமை தான்.

இறைவன் அருளிய திருமறையில் உள்ள இத்தகைய அறிவுரைகள் இஸ்லாமியர்கள் மட்டுமின்றி, மனித நேயத்திலும், நீதி நேர்மையிலும் நம்பிக்கை கொண்ட அனைவரும் கடைபிடிக்க வேண்டியவை ஆகும்.
 
அவற்றை கடை பிடித்து, உலகில் அமைதி, வளம், மற்றும் நல்லிணக்கத்தை பெருக்கவும், தீமைகளை ஒழிக்கவும் பாடுபட இந்நன்னாளில் உறுதியேற்போம் என்று தெரிவித்துள்ளார்.

 விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், நபிகள் நாயகத்தின் வழிகாட்டுதலின்படி உலகில் அன்பு பெருகவும், அமைதி நிலைபெறவும் இஸ்லாமியர் ஒவ்வொருவரும் நோன்பிருந்து கடமையாற்றுவது போற்றுதலுக்குரியதாகும்.

இஸ்லாமியர், கிறிஸ்தவர் உள்ளிட்ட சிறுபான்மைச் சமூகத்தினரும், தலித்துகள், பழங்குடியினர் உள்ளிட்ட பிற உழைக்கும் மக்களும் ஒருங்கிணைந்த அரசியல் சக்தியாய் எழுச்சிபெற வேண்டுமென இந்த இனிய ரமலான் திருநாளில் உறுதியேற்போம் என்று தெரிவித்துள்ளார்.

சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், இல்லாரும், இருப்போரும் நோன்பிலும், தொழுகையிலும் ஒன்றே என உணர்த்தும் கண்ணியத் திருநாள் ரமலான் திருநாள்.

இத்தகைய திருநாள் மத, இன, மொழி வேறுபாடுகளைக் கடந்து உலகெங்கும் சகோதரத்துவம், சமத்துவம், சமாதானம் தழைத்தோங்கச் செய்யும் நன்னாளாக அமையட்டும் என்று தெரிவித்துள்ளார்.
Tags:
Privacy and cookie settings