நாடு முழுவதும் உள்ள அனைத்து சிறைகளிலும் சிசிடிவி பொருத்தப்பட வேண்டும். அதற்கு மாநில அரசுகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிறைச்சாலை சீர்திருத்தங்கள் கோரியும், காலியாக உள்ள மாநில மனித உரிமை ஆணைய பணியிடங்களை நிரப்ப உத்தரவிடக் கோரியும் திலீப் கே.பாசு என்பவர் பொது நல வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் டி.எஸ்.தாக்கூர், ஆர்.பானுமதி அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், "நாடு முழுவதும் உள்ள அனைத்து சிறைகளிலும் சிசிடிவி பொருத்தப்பட வேண்டும். அதற்கு மாநில அரசுகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
மாநிலங்களில் உள்ள காவல்நிலைய லாக்-அப் சிறைகளில் ஏதாவது அசம்பாவிதங்கள் நடந்திருந்தால் அந்த குறிப்பிட்ட காவல்நிலையத்தில் மட்டும் கண்காணிப்பு கேமரா பொருத்துவது தொடர்பாக மாநில அரசு முடிவு செய்யலாம்.
உச்ச நீதிமன்ற உத்தரவை ஏற்று நாடு முழுவதும் அனைத்து சிறைகளிலும் ஓராண்டுக்குள் சிசிடிவி கேமராக்களை பொருத்த வேண்டும். அதிகபட்சம் 2 ஆண்டுக்குள் இந்த உத்தரவை நிறைவேற்ற வேண்டும்" என்று தெரிவித்தனர்.
மேலும், அனைத்து காவல் நிலையங்களிலும் குறைந்தது 2 பெண் காவலர்களாக இருக்க வேண்டும் என நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. அதேபோல் மாநில மனித உரிமை ஆணையங்களில் காலியாக உள்ள பணியிடங்களை 3 மாதங்களுக்குள் நிரப்புமாறும் நீதிபதிகள் கூறினர்.