ம.பி.,யில் நிருபர் இறந்தது எப்படி? விசாரிக்க 'யுனெஸ்கோ' கோரிக்கை

ஐக்கிய நாடுகள்: 'வியாபம்' ஊழல் விவகாரம் தொடர்பாக, செய்தி சேகரிக்கச் சென்ற, டில்லி, 'டிவி' நிருபர் மர்மமான முறையில் மரணம் அடைந்தது குறித்து, தீவிர விசாரணை நடத்தப்பட வேண்டும் என,
 
'யுனெஸ்கோ' எனப்படும், ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி, அறிவியல், கலாசார அமைப்பின் தலைவர் வலியுறுத்தி உள்ளார்.
பல ஆண்டுகளாக...: 

மத்திய பிரதேசத்தில், தொழில் முறைக்கல்வி தேர்வு வாரியமான, வியாபம், பல ஆண்டுகளாக ஊழலில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. அரசியல் தலைவர்களுக்கும், வியாபம் உயரதிகாரிகளுக்கும் ஊழலில் பங்கு உள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டது.

இதுகுறித்து, சி.பி.ஐ., விசாரித்து வருகிறது. இதுதொடர்பாக, விசாரணை நடந்து வரும் நிலையில், வழக்கில் சம்பந்தப்பட்ட, 40க்கும் மேற்பட்டோர், மர்மமான முறையில் பலியாகி உள்ளனர்.

இந்நிலையில், யுனெஸ் கோ எனப்படும், ஐ.நா., கல்வி, அறிவியல், கலாசார அமைப்பின் இயக்குனர் இரினா போகோவா, நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:

வியாபம் ஊழல் தொடர்பாக, செய்தி சேகரிக்கச் சென்ற நிருபர், மர்மமான முறையில் இறந்துள்ளார். அவரது குடும்பத்தினருக்கு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

அவரது மரணம் குறித்து, அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி, உண்மையை கண்டறிய வேண்டும்.

பாதுகாப்பான சூழலில்...: 

நிருபர் எப்படி இறந்தார் என்பது குறித்த உண்மையை விசாரித்து, பொதுமக்களுக்கு தெரிவிக்க வேண்டிய கடமை, அதிகாரிகளுக்கு உண்டு;

நிருபர்கள் தம் கடமையை, பாதுகாப்பான சூழலில் செய்யும் நிலை ஏற்பட வேண்டும்; அவர்களுக்கு எதிரான குற்றங்களை தண்டிக்கப்படாமல் விடக்கூடாது. இவ்வாறு இரினா போகோவா கூறினார்.
Tags:
Privacy and cookie settings