பூட்டிய அறைக்குள் 'போர்னோ' பார்ப்பதை தடுக்க முடியாது: உச்ச நீதிமன்றம்

வயது வந்த நபர் ஒருவர் பூட்டிய அறைக்குள் போர்னோ படத்தை பார்த்தால் அதை எப்படி நீதிமன்றம் தடுக்க முடியும் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஹெச்.எல்.தத்து கேள்வி எழுப்பியுள்ளார். 
 
இந்தியாவில் போர்னோகிராஃபி இணையதளங்களுக்கு (ஆபாசப் பட இணையதளங்கள்) இடைக்கால தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. வழக்கறிஞர் கமலேஷ் வஷ்வானி என்பவர் அந்த மனுவை தாக்கல் செய்திருந்தார். 

அந்த மனுவில் அவர், ஆபாச இணையதளங்களை கட்டுப்படுத்துவது தொடர்பான வழக்கில் மத்திய அரசு இன்னும் பதில் மனு தாக்கல் செய்யாததால் இடைக்கால நிவாரணமாக போர்னோ இணையதளுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் எனக் கோரியிருந்தார். 

மேலும், இந்தியாவில் 4 கோடி ஆபாச இணையதளங்கள் இருப்பதாகவும் அவர் சுட்டிக் காட்டியிருந்தார். இந்த மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஹெச்.எல்.தத்து தலைமையிலான அமர்வு, "இதுபோன்ற இடைக்கால உத்தரவுகளை பிறப்பிக்க நீதிமன்றத்தால் இயலாது. 

ஏனெனில், வயது வந்த நபர் ஒருவர் பூட்டிய அறைக்குள் போர்னோ படத்தை பார்ப்பது அவரது அடிப்படை உரிமையாகும். எனவே, அதற்கு எதிராக நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தால், 18 வயது நிரம்பிய நபர் ஒருவர் உச்ச நீதிமன்றத்தை அணுகி கேள்வி எழுப்ப வாய்ப்புள்ளது. 

"வயது வந்த நான், பூட்டிய அறைக்குள் போர்னோ படத்தைப் பார்க்கக் கூடாது என நீங்கள் கூறுவது அரசியல் சட்டப்பிரிவு 21 (தனிநபர் உரிமை)-யை மீறுவதாகும்" எனக் கூறலாம். 

இதனால், வயது வந்த நபர் ஒருவர் பூட்டிய அறைக்குள் போர்னோ படத்தை பார்த்தால் அதற்கு நீதிமன்றம் இடைக்கால தடை விதிக்க முடியாது" என்றார்.

அதேவேளையில், "ஆபாச இணையதளங்களை கட்டுப்படுத்துவது அவசியமானதே. 

இதற்கு தகுந்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். மத்திய அரசின் நிலைப்பாட்டை நீதிமன்றம் எதிர்பார்க்கிறது. இவ்விவகாரத்தில் மத்திய அரசு 4 வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும்" என்றார். 
Tags:
Privacy and cookie settings