போதைப்பொருள் கடத்தல் பெரும்புள்ளி சிறையில் இருந்து தப்பியோட்டம் !

சர்வதேச போதை கடத்தல் தொழிலின் மிக முக்கிய பெரும்புள்ளியான குஸ்மான் என்பவன் இன்று மெக்சிகோ நாட்டு சிறையில் இருந்து தப்பியோடி விட்டான்.
போதைப்பொருள் கடத்தல் பெரும்புள்ளி சிறையில் இருந்து தப்பியோட்டம் !
உலகின் பெரும் செல்வந்தர்கள் பட்டியலை வெளியிடும் ‘போர்ப்ஸ்’ பத்திரிகையின் தரவரிசையில் ஒரு காலத்தில் இடம்பெற்றிருந்த குஸ்மேனுக்கு ’எல் சாப்போ’ என்ற பட்டப் பெயரும் உண்டு.

அமெரிக்கா முழுவதும் நடைபெறும் கொக்கைன், பிரவுன் ஷுகர், கஞ்சா, ஹெராயின் உள்ளிட்ட அனைத்து வகையான போதைப் பொருள் கடத்தலையும், 

வியாபாரத்தையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த குஸ்மேன், இந்த தொழிலின் முடிசூடா சக்கரவர்த்தியாக முன்னர் வலம் வந்தான்.

மெக்சிகோவில் போதைப்பொருள் கடத்தல் கோஷ்டிகளுக்குள் ஏற்பட்ட தொழில் முறை மோதல்களிலும், இது தொடர்பான கொலைகளிலும் இவனுக்கு தொடர்பு இருந்ததால் 
1993-ம் ஆண்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட குஸ்மேன், கடந்த 2001-ம் ஆண்டு சிறையில் இருந்து தப்பி விட்டான்.

சிறை கைதிகளுக்கு சலவை செய்த துணிகளை கொண்டுவரும் ஒரு வண்டிக்குள் மறைந்து அவன் தப்பித்து விட்டதாக அப்போது செய்திகள் வெளியாகின.

பின்னர், போலீசாரிடம் மீண்டும் பிடிபட்டு மெக்சிகோ மத்திய சிறைக்கு திரும்பிய ’எல் சாப்போ’ குஸ்மான் (உள்ளூர் நேரப்படி இன்று) இரவு 8.52 மணிக்கு தப்பியோடி விட்டதாக சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அவன் மெக்சிகோ நகரை விட்டு தப்பிச் செல்வதை தடுக்கும் வகையில் சிறையின் அருகாமையில் உள்ள 
டொலுக்கா விமான நிலையத்தில் இருந்து புறப்படும் அனைத்து உள்நாட்டு விமானங்களும் ரத்து செய்யப் பட்டுள்ளன.

அப்பகுதியில் உள்ள சாலை வழியாக செல்லும் அனைத்து வாகனங்களும் தீவிரமான சோதனைக்கு உட்படுத்தப் பட்டுள்ளன. இதனால் மெக்சிகோ நகரமே பரபரப்பாக காணப்படுகிறது.
Tags:
Privacy and cookie settings